வங்கதேசம் கடுமையான காலநிலை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம்
வரும் நவம்பர் 10-ஆம் தேதி பிரேசிலில் நடைபெறவிருக்கும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் (COP30) கத்தோலிக்கத் திருஅவை வறிய மற்றும் காலநிலையால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளான வங்கதேசம் போன்றவற்றின் சார்பாகப் பேசும் என்று உறுதியளித்துள்ளார் வத்திக்கானின் ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் மைக்கேல் பெலிக்ஸ் ஷெர்னி.
வங்கதேசத்திற்கான தனது பயணத்தின்போது (நவம்பர் 1–5) இவ்வாறு தெரிவித்த அவர், வங்கதேசம் போன்ற நாடுகளின் துன்பங்கள் "பன்னாட்டு அநீதி" மற்றும் வளர்ந்த நாடுகளின் தீங்கு விளைவிக்கும் கொள்கைகளின் விளைவாகும் என்று வலியுறுத்திக் கூறினார்.
இடம்பெயர்ந்த மக்கள், ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோர் மற்றும் தலத்திருஅவைத் தலைவர்களைச் சந்தித்த அவர், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களைப் பெருக்கி, உலகத் தலைவர்களுக்கு அவர்களின் பொறுப்புகளை நினைவூட்டுவதற்கான திருஅவையின் பணியையும் வலியுறுத்தினார்.
வங்கதேசம் கடுமையான காலநிலை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. 2050-ஆம் ஆண்டுக்குள், கடல் மட்ட உயர்வு காரணமாக, அந்நாடு அதன் அழகில் ஒரு பங்கு நிலத்தையும், உணவு உற்பத்தியில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கையும் இழக்க நேரிடும் என்று IMF எச்சரித்துள்ளது. மேலும் 2014 முதல் 2023 வரை, 1 கோடியே 47 இலட்சம் வங்கதேசத்தினர் இயற்கை பேரழிவுகளால் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்