வத்திக்கானில் கிறிஸ்துமஸ் மரம் மற்றும் இயேசு பிறப்புக் காட்சி!
செபஸ்தியான் வனத்தையன் - வத்திக்கான்
டிசம்பர் 15, திங்கள்கிழமையன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தில் இடம்பெற்ற விழா ஒன்றின்போது வத்திக்கான் நகர நிர்வாகத்துறையின் தலைவர் அருள்சகோதரி இராஃபேலா பெத்ரினி அவர்கள் கிறிஸ்துமஸ் மரத்தையும் பிறப்புக் காட்சியையும் ஒளி ஏற்றி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய அருள்சகோதரி பெத்ரினி அவர்கள், புனித பிரான்சிஸ் அசிசியார் அவர்களால் ஈர்க்கப்பட்ட அமைதி, படைப்பின் மீதான அக்கறை மற்றும் உலகளாவிய உடன்பிறந்த உறவின் அடையாளங்களாக இவற்றை எடுத்துரைத்தார்.
இந்தக் கிறிஸ்து பிறப்புக் காட்சி குடிலைத் தயார்செய்வதற்கான மூலப்பொருள்களை (elements) நன்கொடையாக வழங்கிய இத்தாலிய மறைமாவட்டங்களைச் சேர்ந்த துறவற மற்றும் சிவில் பிரதிநிதிகள் வத்திக்கான் அதிகாரிகளுடன் விழாவில் கலந்து கொண்டனர். மேலும் இக்கொண்டாட்டத்துடன், வத்திக்கான் ஜென்டர்மேரி இசைக்குழு மற்றும் மாநிலப் பாடகர் குழுக்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் நோசெரா இன்ஃபீரியோர்-சாரோனோ மறைமாவட்டத்தால் உருவாக்கப்பட்ட இயேசுவின் பிறப்புக் காட்சி தெற்கு இத்தாலியின் கலாச்சார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிக்கின்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் இங்கு வைக்கப்பட்டுள்ள ஏறத்தாழ 25 மீட்டர் உயரமுள்ள ஐரோப்பிய கிறிஸ்துமஸ் மரம் போல்சானோ-பிரெஸ்ஸனோன் மறைமாவட்டத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகும்.
மேலும் இந்தக் கிறிஸ்து பிறப்பு காட்சிகள் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் நாளன்று நடைபெறும் ஆண்டவரின் திருமுழுக்கு விழா வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்