தவக்காலத் தியானத்தின் இரண்டாம் நாள் தவக்காலத் தியானத்தின் இரண்டாம் நாள்   (ANSA)

வத்திக்கான் தவக்காலத் தியானம் : கடவுளின் பேருதவி!

ஆயர் வார்டன் அவர்கள் தனது உரையில், விசுவாசத்தை ஒரு வகையான காப்பீட்டுக் கொள்கையாகக் கருதுவதற்கு எதிராக எச்சரித்த அதேவேளை, விசுவாசிகள் புலம்பல் மற்றும் சோதனையின் வழியாகக் கடந்து இறையருளின் ஆழமான அனுபவத்தை நோக்கிச் செல்ல அழைப்பு விடுத்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வத்திக்கானில் இடம்பெற்று வரும் தவக்கால ஆண்டுத் தியானத்தின் இரண்டாம் நாளில், 17-ஆம் நூற்றாண்டின் கல்வியாளர் மேரி வார்டின் வார்த்தைகளை எடுத்துக்காட்டி, "உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், கடவுள் உதவுவார்"  என்று ஆயர் வார்டன் அவர்கள் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

'நெருக்கடி காலங்களில் அவசரகால பதில் மட்டுமல்ல, கடவுளின் உதவி எப்போதும் நிலையானதும் நீடித்ததுமாக இருக்கின்றது’ என்ற திருவிவிலியத்தின் இறைவார்த்தைகள் குறித்த தனது எண்ணங்களை வத்திக்கான் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டினார் ஆயர் வார்டன்.

திருப்பாடல் 90 மற்றும் புனித பெர்னார்டின் வாழ்வை மேற்கோள் காட்டி, கடவுளின் உதவியை விசுவாசிகள் வாழும் மற்றும் நடமாடும் ஒரு "வாழ்விடமாக" விவரித்தார் ஆயர் வார்டன்.

“ஆழ்ந்த துன்பங்களை அனுபவித்து கடவுளை நோக்கிக் கூப்பிடும், ஆனால் எந்தப் பதிலும் கிடைக்காத ஒரு மனிதன்” என்று யோபுவை விவரித்த ஆயர் வார்டன் அவர்கள், “மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள் என்பதற்கான எளிய விளக்கங்களை யோபு ஏற்க மறுக்கிறார்” என்றும், “தனது வேதனையின் நடுவிலும் கூட, அவர் தொடர்ந்து கடவுளைத் தேடுகிறார், அவரைப் புரிந்துகொள்ள ஏங்குகிறார்” என்றும் குறிப்பிட்டார்.

விசுவாசத்தை ஒரு வகையான காப்பீட்டுக் கொள்கையாகக் கருதுவதற்கு எதிராக எச்சரித்த ஆயர் வார்டன் அவர்கள், விசுவாசிகள் புலம்பல் மற்றும் சோதனையின் வழியாகக் கடந்து இறையருளின் ஆழமான அனுபவத்தை நோக்கிச் செல்ல அழைப்பு விடுத்தார்.

“கடவுளின் உதவியை உண்மையாக நம்பியிருப்பது பாதுகாப்பைப் பற்றியது அல்ல, மாறாக பயத்தைத் தாண்டி புதிய வாழ்க்கைக்கு நம்மை வழிநடத்த கடவுள் நம்மை அனுமதிப்பதைப் பற்றியது” என்று கூறி தனது இரண்டாம் நாள் தியான உரையை நிறைவு செய்தார் ஆயர் வார்டன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 பிப்ரவரி 2026, 13:00