தியானத்தில் பங்கேற்கும் திருத்தந்தை தியானத்தில் பங்கேற்கும் திருத்தந்தை   (ANSA)

வத்திக்கான் தவக்காலத் தியானம் : கிறிஸ்துவின் வழியில் விடுதலை!

வத்திக்கானில் இடம்பெற்று வரும் தவக்கால ஆண்டுத் தியானத்தின் மூன்றாம் நாளில் "விடுதலை பெறுதல்" (Becoming Free) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு மூன்றாம் நாளுக்கான தனது தியான உரையை வழங்கினார் ஆயர் எரிக் வார்டன்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

"சுதந்திரம் என்ற கருத்தாக்கம் பொது இடங்களில் விவாதிக்கப்படும்போது, அது மிகுந்த முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதாக மாறியுள்ளது" என்றும், "இது பெரும்பாலும் சமூகங்களை ஒன்றுபடுத்தாமல், அவற்றுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் ஒரு வலிமையான அரசியல் முழக்கமாகவே பயன்படுத்தப்படுகிறது" என்றும் குறிப்பிட்டார் ஆயர் எரிக் வார்டன்.

வத்திக்கானில் இடம்பெற்று வரும் தவக்கால ஆண்டுத் தியானத்தின் மூன்றாம் நாளில் "விடுதலை பெறுதல்" (Becoming Free) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தனது தியான உரையை வழங்கியபோது இவ்வாறு கூறினார் ஆயர் வார்டன்.

"சுதந்திரம் என்ற பெயரில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அதைப் பற்றிய முரண்பட்ட விளக்கங்கள் சச்சரவுகளையே உண்டாக்குகின்றன" என எச்சரித்த ஆயர் வார்டன் அவர்கள், "ஒரு தரப்பினருக்கு சுதந்திரமாகத் தெரிவது, மற்றொரு தரப்பினருக்கு ஒடுக்குமுறையாக உணரப்படலாம் என்பதே இதற்கு காரணம்" என்று கூறினார்.

புனித பெர்னார்டின் சிந்தனைகளை மேற்கோள் காட்டி, "உண்மையான கிறிஸ்தவச் சுதந்திரம் என்பது ஒருவரின் சுய விருப்பத்தையோ அல்லது கட்டுப்பாடற்ற ஆசைகளையோ பின்தொடர்வது அல்ல" என்று வலியுறுத்தினார் ஆயர் வார்டன்

அதற்குப்  பதிலாக, மீண்டும் மீண்டும் தவறுகள் செய்யக்கூடிய இயல்புடைய மனிதர்கள், பெரும்பாலும் தன்னலத்தை நிலைநாட்டுவதையே சுதந்திரம் என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்" என்று சுட்டிக்காட்டிய ஆயர் வார்டன் அவர்கள், "இறைத்தந்தைக்குக் கிறிஸ்து காட்டிய கீழ்ப்படிதலில் வேரூன்றியுள்ள உண்மையான சுதந்திரம், மற்றவர்களை ஆதிக்கம் செலுத்துவதில் இல்லை; மாறாக, தன்னை மற்றவர்களுக்காகக் கையளிக்கும் அன்பில் (Self-giving love) உள்ளது" என்றும் எடுத்துக்காட்டினார்.

சுதந்திரம் என்ற போர்வையில் ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்துவதை கண்டித்த ஆயர் வார்டன் அவர்கள், "உண்மையான கிறிஸ்தவ விடுதலை என்பது மற்றவர்களின் உரிமைகளையும் மதிப்பையும் பாதிப்பதாக இருக்கக்கூடாது" என்றும், "அது எப்போதும் தனிமனித ஒழுக்கத்தோடும் மற்றவர் மீதான மாண்போடும் தொடர்புடையது" என்றும் விளக்கிக் கூறினார்.

"தன்னைத் தாழ்த்தி வெறுமையாக்கும் கிறிஸ்துவின் பண்பே உண்மையான சுதந்திரத்தின் அழியாத அடையாளமாகும்" என்று கூறிய ஆயர் வார்டன் அவர்கள், "இது வன்முறைக்கு வன்முறையால் பதிலடி கொடுப்பதில் இல்லை, மாறாக, நீதியை நிலைநாட்டும் பணியில் தேவைப்பட்டால் துன்பங்களை ஏற்கும் மனப்பக்குவத்தில்தான் அடங்கியுள்ளது" என்று சுட்டிக்காட்டி மூன்றாம் நாளுக்கான தனது தியான உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 பிப்ரவரி 2026, 12:56