உக்ரைன் மீது ரஷ்யாவின் மிகக் கொடூரமான தாக்குதல்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
இவானோ-பிராங்கிவ்ஸ்க் (Ivano-Frankivsk) மற்றும் உஷாரோட் (Uzhhorod) உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு நகரங்களைக் குறிவைத்து 1,500-க்கும் மேற்பட்ட அதிதூர டிரோன்கள் ஏவப்பட்டதாக உக்ரைன் நாட்டிற்கான திருத்தூதரக தூதர் விஸ்வலாதாஸ் குல்போகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வத்திக்கான் செய்திக்கு தொலைபேசி வழியாக இவ்வாறு கூறியுள்ள பேராயர் குல்போகாஸ் அவர்கள், போர் தொடங்கிய நாள் முதல் ரஷ்யா நடத்திய மிக மோசமான தாக்குதலைத் தொடர்ந்து, உக்ரைனில் நிலவும் ஆபத்தான சூழலை விவரித்துள்ளார்.
மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அங்குள்ள பல நகரங்கள் மீது நடத்தப்பட்ட கடுமையான குண்டுவீச்சுகளால், தலைநகர் கீவ் நகரில் மட்டும் குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 48 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள பேராயர் குல்போகாஸ் அவர்கள், இதனைத் தொடர்ந்து, ஒரே இரவில் தலைநகர் கீவ்வை நோக்கி ஏறத்தாழ 60 ஏவுகணைகள் பாய்ந்தன என்றும், அவற்றுள் பெரும்பாலானவை அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மனிதநேய உதவி வாகனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ள பேராயர் குல்போகாஸ் அவர்கள், குறிப்பாக, கெர்சன் (Kherson) பகுதியில் மனிதநேய உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, ஐக்கிய நாடுகள் சபையின் (UN) முத்திரை தெளிவாகப் பதிக்கப்பட்டிருந்த உதவி வாகனம் ஒன்று தாக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இத்தகைய வாகனங்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருதரப்பு அதிகாரிகளுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவித்த பின்னரே இயக்கப்படுகின்றன என்பதை வலியுறுத்திய அவர், இதனால் இந்தத் தாக்குதல்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகக் கூறினார்.
இறுதியாக குண்டுவீச்சுகளின் தொடர்ச்சியான தீவிரம், போரை நீட்டிப்பதற்கான ஒரு உறுதியான நோக்கத்தையே காட்டுகிறது என்று எச்சரித்துள்ள பேராயர் குல்போகாஸ் அவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, மக்கள் அனைவரும் அமைதிக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்