புனித பேதுரு பேராலயம் புனித பேதுரு பேராலயம்  (ANSA)

எல்லைகளைக் கடந்த ஆன்மீகப் பயணம்!

"எல்லையைக் கடந்து" திட்டம் திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்மீக வளங்கள், பல்லூடக வழிகாட்டிகள், செயலிகள் மூலம் புனித பேதுரு பேராலயம், புனித தேவதூதரின் கோட்டை மற்றும் பாந்தியன் போன்ற முக்கியமான ஆலயங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை இணைக்கும் சிறப்புப் பயணத் திட்டங்களை வழங்கும்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

கலை, நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, பார்வையாளர்களுக்கு ஆழமான சமயச் சுற்றுலா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, உரோம் மறைமாவட்டம் ஆர்ஃபியோ (Orpheo) நிறுவனத்துடன் இணைந்து "எல்லையைக் கடந்து" எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த முன்னெடுப்பு மே 28, வியாழனன்று புனித புடென்சியானா பேராலயத்தில் முறையாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டம் திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்மீக வளங்கள், பல்லூடக வழிகாட்டிகள், செயலிகள் மூலம் புனித பேதுரு பேராலயம், புனித தேவதூதரின் கோட்டை மற்றும் பாந்தியன் போன்ற முக்கியமான ஆலயங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை இணைக்கும் சிறப்புப் பயணத் திட்டங்களை வழங்கும்.

மேலும், பொதுவாகப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத உன்னத இடங்களை நேரில் கண்டுகளிக்கும் அரிய வாய்ப்பும், ஆன்மீக இசை உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்கும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும்.

உரோம் மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளரான கர்தினால் பால்டசாரே ரெய்னா மற்றும் ஆர்ஃபியோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அந்தோனியோ சிலிபெர்டி ஆகியோருக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, சாதாரண சுற்றுலாப் பயணத்தை புனித இடங்களின் ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்தும் ஒரு ஆன்மீகப் பயணமாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

தற்போது, இத்திட்டத்தின் கீழ் உரோம் முழுவதும் பத்து சுற்றுப்பயணங்கள் மற்றும் பதினாறு ஆலயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் எதிர்காலத்தில் இதனை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களும் உள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மே 2026, 14:31