செக் குடியரசின் மறைசாட்சிகளுக்கு கர்தினால் செர்னி புகழாரம்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஜூன் 06, சனிக்கிழமையன்று, செக் குடியரசு நாட்டின் அருள்பணியாளர்கள் ஜான் புலா மற்றும் வாக்லாவ் டர்போலா ஆகியோர் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படவிருக்கும் நிலையில், உரோமில் இடம்பெற்ற “கம்யூனிசத்தின் அருளாளர் மறைசாட்சிகள்” என்ற கருத்தரங்கில் உரையாற்றிய ஒருங்கிணைந்த மனித முன்னேற்றதிற்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் மைக்கேல் செர்னி அவர்கள், இரு அருள்பணியாளர்களின் சான்று வாழ்வு குறித்து எடுத்துக்காட்டினார்.
வரலாற்றின் இருண்ட மேகங்களைக்கூட ஒளி ஊடுருவ முடியும் என்றும், கடவுளை நம்புபவர்களின் வாழ்வில் இருந்து எந்த வன்முறையாலும் கடவுளின் இருப்பை அழிக்க முடியாது என்றும் கூறியுள்ள கர்தினால் செர்னி அவர்கள், இந்த இருவரின் மறைசாட்சி என்பது தோல்வியல்ல, மாறாக அது நம்பிக்கை, தைரியம் மற்றும் எதிர்நோக்கின் வெற்றி என்றும் விவரித்துள்ளார்.
மேலும் சிறைவாசம், அவமதிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்த அருள்பணியாளர்கள் கிறிஸ்துவை மறுக்கவோ அல்லது தங்கள் அருள்பணித்துவ அடையாளத்தைக் கைவிடவோ மறுத்துவிட்டனர் என்றும், அவர்களின் வலிமை செபம், கிறிஸ்துமீதான அன்பு மற்றும் அன்றாடத் தேர்வுகளில் இருந்த உண்மையின் மூலம் கிடைத்தது என்றும் கர்தினால் செர்னி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்;
அவர்கள் நீதிமன்றத்தை ஒரு மறையுரை மேடையாகவும், சிறையை ஒரு பலிபீடமாகவும் மாற்றினார்கள் என்று குறிப்பிட்ட கர்தினால் அவர்கள், வெறுப்பும் வன்முறையும் நிறைந்த உலகத்திலும் கூட உண்மை, மன்னிப்பு மற்றும் நம்பிக்கைக்காகச் செயல்பட கிறிஸ்தவர்களை இந்த இரு அருள்பணியாளர்களின் சான்றுவாழ்வு தொடர்ந்து ஊக்குவிக்கிறது என்று குறிப்பிட்டார்.
திருப்பீடத்திற்கான செக் தூதரகம் நடத்திய இந்நிகழ்வில், செக்கோஸ்லோவாக்கிய கம்யூனிச ஆட்சியில், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் போலி விசாரணைகள் மூலம் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்ட இரண்டு செக் நாட்டு அருள்பணியாளர்களின் தியாக வாழ்வு நினைவு கூரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்