அறுவடை செய்யப்பட்ட நெல் அறுவடை செய்யப்பட்ட நெல் 

வேளாண் துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைக்க உலக நாடுகளை வலியுறுத்திய திருப்பீடம்

தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) 35-வது ஐரோப்பிய வட்டார மாநாட்டில், உலகளாவிய உணவு நெருக்கடி குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

போர்கள், பொருளாதார நெருக்கடிகள், காலநிலை மாற்றம் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவற்றால் அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ள, வலுவான மற்றும் மீள்திறன் கொண்ட வேளாண்-உணவு அமைப்புகளை நிறுவ உலகளாவிய தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மே 12, செவ்வாயன்று, தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் இடம்பெற்ற, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஐரோப்பாவிற்கான 35-வது வட்டார மாநாட்டில் உரையாற்றியபோது, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO ), சர்வதேச வேளாண் வளர்ச்சி நிதியம் (IFAD), மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றிற்கான திருப்பீடத்தின் நிரந்தர பார்வையாளர் பேரருள் திரு பெர்னாண்டோ சிகா அரேல்லானோ அவர்கள் கூறினார்.

அண்மைய ஆண்டுகளில் பெரும் இடையூறுகளைச் சந்தித்துள்ள வேளாண்-உணவு அமைப்புகளில் மீள்திறன் இருக்க வேண்டும் என்ற திருப்பீடத்தின் அழைப்பை பேரருள் திரு அரேல்லானோ அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உற்பத்தியை அதிகரிப்பது மட்டும் போதாது என்று வலியுறுத்திய அந்த மாநாடு, இயற்கை வளங்களைச் சுரண்டுவதைக் குறைத்து, பாதிக்கப்படக்கூடிய கிராமப்புற சமூகங்களில் முதலீடு செய்வதன் மூலம் வேளாண் அமைப்புகளை மாற்றியமைக்க உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது.

இந்த மாநாட்டில் சிறந்த பொருளாதார வாய்ப்புகள் மற்றும் அரசின் கொள்கைகள் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், இளைஞர்கள் விவசாயத்தில் நீடிப்பதை ஊக்குவிப்பதற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, உணவுப் பதப்படுத்துதல் மற்றும் விற்பனை என உணவு விநியோகச் சங்கிலியின் அனைத்து நிலைகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊழியர்களுக்கான நியாயமான ஊதியம் மற்றும் நிலையான செயல்பாடுகள் மிக அவசியம் என்பதை உலகத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

விவசாயத் துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும், கிராமப்புறத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உலக நாடுகளின்‌ அரசுகளை இம்மாநாட்டில் கலந்து கொண்ட திருப்பீடத்தின் பிரதிநிதிகள் ஊக்குவித்தனர், மேலும் எந்தவொரு நபரும் அன்றாட உணவின்றித் துன்புறக் கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 மே 2026, 14:48