Pope Francis attends Instrumentum laboris

உலகளாவிய திருஅவை மாநாடு 2028: பயணப்பாதையைத் தீர்மானிக்கும் நான்கு படிநிலைகள்!

2028 அக்டோபர் மாதத்தில் வத்திக்கானில் நடைபெறவுள்ள உலகளாவிய திருஅவை மாநாட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாமன்றப் பொதுச்செயலகம் வெளியிட்டுள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மே 20, புதன்கிழமையன்று, வத்திக்கானில் 2028 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடம்பெறும் திருஅவை  மாநாட்டை முன்னிட்டு, மாமன்ற பொதுச்செயலகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை  வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் உள்ளூர் திருஅவைகளும் ஆயர் பேரவைகளும் நினைவு கூர்தல், விளக்குதல், திசைப்படுத்துதல் மற்றும் கொண்டாடுதல் ஆகிய நான்கு நிலைகளின் வழியே இந்த மாநாட்டிற்காகத் தங்களைத் தயாரித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2021 முதல் 2024 வரை இடம்பெற்ற ஆயர் மாமன்றத்தின் இறுதி ஆவணத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ளூர் திருஅவைகள், ஆயர் பேரவைகள் மற்றும் கண்டங்கள் அளவிலான அமைப்புகளுக்கு இந்தச் செயல்முறை ஆதரவளிப்பதாக அமையும் என்று ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலகம் தெரிவித்துள்ளது‌.

 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பல்வேறு மறைமாவட்டங்களும் மறையாட்சி வட்டங்களும் தங்களின் ஆயர் மாமன்ற அனுபவங்களை அறிக்கைகள் மற்றும் பிற திருஅவைகளுக்கான கடிதங்கள் வழியாக மறுபரிசீலனை செய்து 'நினைவுகூரும்' பணியைத் தொடங்கவுள்ளன.

2027 ஆம் ஆண்டின் இறுதியில், ஆயர் பேரவைகள் தங்களின் இந்த அனுபவங்களை இறையியல் மற்றும் மேய்ப்புப்பணி சார்ந்த சிந்தனைகள் வழியாக ஆராய்ந்து 'விளக்கும்' பணியை மேற்கொள்ளவுள்ளன.

2028 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கண்டங்கள் அளவிலான மாநாடுகள் நடத்தப்படவுள்ளன. இவை, திருஅவையின் பொதுவான முன்னுரிமைகளையும் எதிர்காலப் பாதையையும் துல்லியமாக அடையாளம் காண்பதன் மூலம் ஒட்டுமொத்த திருஅவையைத் 'திசைப்படுத்தும்' பணியை மேற்கொள்ளும்.

இம்முயற்சிகளின் இறுதிக்கட்டமாக, 2028 அக்டோபரில் வத்திக்கானில் திருத்தந்தையுடன் இணைந்து உலகளாவிய திருஅவை ஒன்று கூடி, இம்மாமன்றப் பயணத்தை மகிழ்வோடு 'கொண்டாடும்.’

இந்தச் செயல்முறை புதிய ஆலோசனைகள் அல்லது நிர்வாகப் பணிகளை விட, பகுத்தறிதல், திருஅவைகளுக்கு இடையிலான கொடைகளைப் பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் ஆயர் மாமன்ற உருமாற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஒவ்வொரு மாநாடும் அதன் அனுபவங்களை மதிப்பிட்டு, நற்பலன்களையும் சவால்களையும் கண்டறிந்து, புதுப்பிக்கப்பட்ட மறைப்பணி அர்ப்பணிப்பை ஊக்குவிக்கும்.

ஆயர் மாமன்றத்தின் பொது செயலரான கர்தினால் Mario Grech அவர்கள், இந்த மாநாடுகள் சமூகவியல் அல்லது தொழில்நுட்ப ரீதியான பயிற்சிகள் அல்ல, மாறாக பகிரப்பட்ட பகுத்தறிதலின் ஆன்மீக அனுபவங்கள் என்று  வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பவர்கள் பாலினம், தலைமுறைகள், கலாச்சாரங்கள் மற்றும் அழைத்தல்கள் ஆகியவற்றின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும், மேலும் விளிம்புநிலை மக்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலகம், ஆயர் மாமன்றக் குழுக்களின் ஆதரவுடன் ஒவ்வொரு நிலையையும் ஏற்பாடு செய்யும் பொறுப்பு , அந்தந்த ஆயர்கள், ஆயர் பேரவைகள் மற்றும் கண்டத் தலைவர்களைச் சாரும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளது 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 மே 2026, 12:04