16th Ordinary General Assembly of the Synod of Bishops in Vatican

இத்தாலிய ஆயர் பேரவையின் 82-வது பொதுஅவை!

இத்தாலிய திருஅவையின் வருங்கால மேய்ப்புப்பணித் திட்டங்களை வகுப்பதற்கான 82-வது பொதுஅவை மே 25 முதல் 28 வரை வத்திக்கானில் நடைபெறுகிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

இத்தாலிய ஆயர் பேரவையின் 82-வது பொதுஅவை, மே 25 திங்கள் முதல் 28 வியாழன் வரை வத்திக்கானின் ஆயர் மாமன்ற அரங்கில் நடைபெறவுள்ளது. இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் மத்தேயோ சுப்பி அவர்களின் அறிமுக உரையுடன் தொடங்கும் இக்கூட்டம், வியாழக்கிழமையன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் உரையுடன் நிறைவுபெறும்.

இத்தாலிய திருஅவைகளின் பயணத்திற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆயர் மாமன்ற அணுகுமுறையின் வரவேற்பு தொடர்பான நடவடிக்கைகளில் இந்த அவை கவனம் செலுத்த உள்ளது. இந்தக் கூட்டத்தில், ஆயர் மாமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் இறுதித் தொகுப்பு அறிக்கையின் அடிப்படையில், வரும் ஆண்டுகளுக்கான மேய்ப்புப்பணி முன்னுரிமைகளுக்கு இத்தாலிய ஆயர்கள் ஒப்புதல் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறை நம்பிக்கையை அலட்சியப்படுத்தும் மற்றும் நற்செய்தி விழுமியங்கள் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட இன்றைய சூழலில், திருஅவை வாழ்வின் மிக முக்கியமான பணிகளை அடையாளப்படுத்துவதே இந்த வழிகாட்டுதல்களின் நோக்கமாகும். இக்கூட்டத்தின் போது, வட இத்தாலிய ஆயர் பேரவையின் துணைத் தலைவர், பொருளாதாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பணிக்குழுக்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறும்.

மேலும் 2027-ம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய நற்கருணைப் பெருவிழாவிற்கான தயாரிப்புகள் மற்றும் சட்ட மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதங்கள் இடம் பெறும். கர்தினால் சுப்பி அவர்களின் தொடக்க உரை மற்றும் மே 27 அன்று நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 மே 2026, 08:07