கிரிகோரியன் எட்ரஸ்கன் அருங்காட்சியகம் கிரிகோரியன் எட்ரஸ்கன் அருங்காட்சியகம் 

கிரிகோரியன் எட்ருஸ்கன் அருங்காட்சியகத்தின் 200 ஆண்டுகால வரலாறு!

வத்திக்கான் அருங்காட்சியகங்களின் 'அருங்காட்சியக வியாழன்' என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக மே 21 அன்று சிறப்புப் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மே 21, வியாழனன்று மாலை 5:00 மணிக்கு வத்திக்கான் அருங்காட்சியகங்களில் 'அருங்காட்சியக வியாழன்' (Museum Thursdays) என்ற நிகழ்வின் ஒரு பகுதியாகச் சிறப்புப் பயிலரங்கம் நடைபெறவுள்ளது. 'கிரிகோரியன் எட்ருஸ்கன் அருங்காட்சியகத்தில் முப்பது ஆண்டுகளும் அதற்கு அப்பாலும்: ஒரு பயணத்தின் நாட்குறிப்பு' என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு இடம்பெறும்.

வத்திக்கான் அருங்காட்சியகங்களில் வியாழக்கிழமைதோறும் கலாச்சார நிகழ்வுகளும் சிறப்பு விரிவுரைகளும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், மே 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்வில், கிரிகோரியன் எட்ருஸ்கன் அருங்காட்சியகத்தின் முன்னாள் காப்பாளர் மொரிசியோ சன்னிபாலே சிறப்புரையாற்ற உள்ளார்.

1837-ஆம் ஆண்டு திருத்தந்தை பதினாறாம் கிரிகோரியால் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தின் வளர்ச்சி குறித்து, அங்கு பணியாற்றிய சன்னிபாலே உரையாற்றுகிறார். தனது நீண்டகால அனுபவத்தின் வாயிலாக, அரிய கலைப் பொருட்களின் மறுசீரமைப்பு, ஆராய்ச்சிகள் மற்றும் அதன் பின்னணியில் உழைத்த மனிதர்கள் குறித்து அவர் விளக்கவுள்ளார்.

அருங்காட்சியகம் என்பது வெறுமனே பொருள்களை பாதுகாப்பதற்கும் காட்சிப்படுத்துவதற்குமான இடம் மட்டுமல்லாமல், அது உரையாடல், கலாச்சார உருவாக்கம் மற்றும் கற்றல் ஆகியவற்றின் ஒரு துடிப்பான மையமாகவும் திகழ்கிறது என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இந்த கருத்தரங்கு அமைய உள்ளது.

200-ஆவது ஆண்டு நிறைவை நெருங்கும் வேளையில், இந்த அருங்காட்சியகத்தின் வரலாற்றுப் பரிணாமம் குறித்து சன்னிபாலே அவர்கள் உரையாற்றுவார். ஆரம்பகால அகழ்வாராய்ச்சிகள் முதல் இன்றைய நவீன கால வளர்ச்சி வரையிலான முக்கிய மைல்கற்கள் மற்றும் வரலாற்று மாற்றங்கள் இதில் விளக்கப்படும்.

வத்திக்கான் அருங்காட்சியகங்களின் இயக்குநர் பார்பரா ஜட்டா அவர்கள் இந்நிகழ்வை அறிமுகம் செய்து வைப்பார். மேலும், முன்னாள் இயக்குநர் பிரான்செஸ்கோ புரானெல்லி மற்றும் ஜியாண்டோமெனிகோ ஸ்பினோலா ஆகியோரும் இதில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 மே 2026, 12:25