கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது 

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கர்தினால் பரோலின் அமைதி முழக்கம்!

மக்களிடையே நிலவும் நல்லிணக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை வாக்குறுதி மட்டுமல்ல, திருஅவையின் முக்கிய அர்ப்பணிப்புமாகும்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

உக்ரைன் போரினால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்த வேளையில், அருளாளர் (புனிதர்) பட்டப் பரிசீலனையில் இருக்கும் ராபர்ட் சூமனின் தொலைநோக்கு நல்லிணக்க முயற்சியை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் ஊக்குவிக்க வேண்டும் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

மே 19, செவ்வாயன்று, ஸ்ட்ராஸ்பர்க்கில் இடம்பெற்ற ஐரோப்பிய நாடாளுமன்ற அமர்வில், "ஐரோப்பிய தகுதி விருதைப் பெற்றுக் கொண்டு உரையாற்றியபோது இவ்வாறு கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை அவர்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதுடன், ராபர்ட் சூமன் அவர்களை புனிதராக அறிவிப்பதற்கான செயல்முறைகள் தற்போது நடந்து வருவதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

மக்களிடையே நிலவும் நல்லிணக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை வாக்குறுதி மட்டுமல்ல, திருஅவையின் முக்கிய அர்ப்பணிப்புமாகும் என்று வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள்,  கிறிஸ்தவ வரலாற்றில் வேரூன்றிய ஐரோப்பாவின் விழுமியங்களை எடுத்துரைத்ததுடன், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மனித மாண்பு எக்காரணம் கொண்டும் மீறப்படக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஐரோப்பிய அமைப்புகளுடன் இணைந்து "அமைதியை உருவாக்கும் கைவினைக் கலைஞர்களாகச்" செயல்பட திருப்பீடம் தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒற்றுமையின் தொடக்கப் புள்ளியான 'ஷூமன் பிரகடனத்தின்' 75-வது ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முதன்முதலாக இந்த விருது வழங்கப்படுகிறது. ஐரோப்பாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்குப் பங்காற்றிய சிறந்த நபர்களைக் கௌரவிக்க ஐரோப்பிய ஒன்றியம் இவ்விருதை வழங்குகிறது.

ஜெர்மனியின் முதல் பெண் அரசுத் தலைவர் ஏஞ்சலா மெர்க்கல், போலந்து ‌நாட்டின் முன்னாள் அதிபர் லெக் வலேசா மற்றும் போர்ச்சுகலின் முன்னாள் அதிபர் அனிபால் கவாகோ சில்வா ஆகியோரும் இந்த விருதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 மே 2026, 12:18