நூலகம் நூலகம்  

வரலாற்றைப் பாதுகாக்கும் "தூதுவர்": வத்திக்கான் நூலகத்தின் அடுத்தகட்ட முன்னெடுப்பு

வத்திக்கான் திருத்தூது நூலகம், ஒரு புகழ்பெற்ற, பழமையான லண்டன் கலைக்கூடமான கொல்நாகி அறக்கட்டளையுடன் இணைந்து “தூதுவர்” என்று பொருள்படும் Nuntius எனும் முன்முயற்சியைத் தொடங்கி வைத்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மே 13 புதன்கிழமை அன்று, வத்திக்கான் திருத்தூது நூலகம், ஒரு புகழ்பெற்ற, பழமையான லண்டன் கலைக்கூடமான கொல்நாகி அறக்கட்டளையுடன் இணைந்து “தூதுவர்” என்று பொருள்படும் Nuntius எனும்  முன்முயற்சியைத் தொடங்கி வைத்துள்ளது.

கடந்த 2025 ஆம்‌ ஆண்டு கொல்நாகி அறக்கட்டளையும் வத்திக்கான் திருத்தூது நூலகமும் இணைந்து முன்னெடுத்த கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு நூல்களைப் பாதுகாக்கும் கோடெக்ஸ் எனும் கூட்டு முயற்சியைத் தொடர்ந்து இரண்டாவது திட்டமாக இந்த "தூதுவர்" எனும் முன்னெடுப்பு அமைந்துள்ளது. இந்தத் திட்டம் நூலகத்தின் ஆவணக் காப்பக இடங்களைப் புதுப்பிப்பதையும் உள்ளடக்கியது.

ஆதரவாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான ஒரு சிறப்பு இரவு உணவை உள்ளடக்கிய இந்த நிகழ்வில், கலாச்சார உறவை முன்னிலைப்படுத்தும் விதமாக கொல்நாகி சேகரிப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கலைப்படைப்புகளுடன் வத்திக்கான் நூலகத்தின் முக்கியமான கலைப்படைப்புகளும்  காட்சிப்படுத்தப்பட்டன.

வரலாற்றில் ஆட்சியாளர்களுக்கும் அரசுகளுக்கும் இடையேயான கூட்டுறவைப் பலப்படுத்தவும், அமைதியை மேம்படுத்தவும், கலாச்சார அடையாளத்தை வெளிப்படுத்தவும் அதிகாரப்பூர்வ பரிசுகளாக கலைப்படைப்புகள் எவ்வாறு நாடுகளுக்கிடையேயான உறவிற்கு உதவியுள்ளது என்பதை இந்த கண்காட்சி எடுத்துக் கூறுகிறது.

வரலாறு, கலை மற்றும் மானுடவியல் கண்ணோட்டங்களை இணைப்பதன் மூலம், அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு அப்பாற்பட்டு அடையாளப் பூர்வ நிகழ்வாக கலைப்படைப்புகளை பரிசாக வழங்குவதன் முக்கியத்துவத்தை இந்த முன்னெடுப்பு ஆராய்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் கலாச்சாரங்களுக்கு இடையே உரையாடலை வளர்ப்பதிலும் உறவை உருவாக்குவதிலும் கலாச்சார உறவின் முக்கியத்துவத்தை பேராயர் ஜியோவானி சிசேர் பகாஸி வலியுறுத்தினார்.

கலைப் பரிமாற்றம் என்பது கலாச்சார தனித்துவத்தைப் பாதுகாத்து கொண்டாடும் அதே வேளையில் ஒற்றுமையையும் ஒருவருக்கொருவர் புரிதலையும் ஊக்குவிக்கும் என்று வத்திக்கான் திருத்தூது நூலகத்தின் புரவலர்களின் தலைவரான காண்டிடா லோடோவிகா சி குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 மே 2026, 13:36