வத்திக்கானில் வேளாண்-சூரியசக்தி பூங்கா அமைக்க இத்தாலியுடன் ஒப்பந்தம்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
வத்தின்கானுக்குச் சொந்தமான சாந்தா மரியா டி கலேரியா பகுதியில், விவசாய நிலத்தைப் பாதிப்பு இல்லாமல் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் "வேளாண்-சூரியசக்தி" (Agrivoltaic) பூங்காவை அமைப்பதற்கான இத்தாலி மற்றும் திருப்பீடத்தின் (Holy See) கூட்டு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
1957 முதல் வத்திக்கான் வானொலி இயங்கி வரும் இப்பகுதியில், விவசாய நிலத்தைப் பாதிப்படையாமல் பாதுகாத்து, வத்திக்கான் நகருக்குத் தேவையான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறைவா உமக்கே புகழ் என்னும் (Laudato si’) திருத்தூதுமடலின் தூண்டுதலால் உருவான இத்திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான ஆற்றல் மீதான திருஅவையின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. ஜூன் 26, 2024 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'சகோதரன் சூரியன் (Fratello Sole) என்ற தன்னாணை அறிக்கை (Motu proprio) மூலம் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்து, அதன் பணிகளைத் தொடர வத்திக்கான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 31, 2025 அன்று பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் மற்றும் இத்தாலிய தூதர் பிரான்செஸ்கோ டி நிட்டோ ஆகியோரால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடந்த ஜூன் 2025-இல் இத்திட்டப் பகுதிக்கு நேரில் சென்றிருந்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இப்பூங்கா பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும், இயற்கையைப் பாதுகாப்பதிலும் உலகிற்கு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக விளங்கும் என்று குறிப்பிட்டார்.
இத்திட்டம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் கூடியவரை மிகக் குறைவாக உறுதி செய்வதுடன், அப்பகுதியின் விவசாய நடவடிக்கைகள், நீர்வள சமநிலை (Hydrogeological balance), பண்பாடு மற்றும் நிலப்பரப்பு பாரம்பரியம் (Landscape heritage) ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பதையும் இது உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்