கர்தினால் மத்தேயோ மரியா சூப்பி கர்தினால் மத்தேயோ மரியா சூப்பி  

உக்ரைனில் அமைதிக்காக கர்தினால் சூப்பி இறைவேண்டல்!

இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் மத்தேயோ மரியா சூப்பி அவர்கள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் நெருக்கத்தையும் திருப்பீடத்தின் அமைதி முயற்சிகளையும் வெளிப்படுத்தும் நோக்கில், ஜூலை 13–15 வரை உக்ரைனில் மனிதாபிமானப் பயணம் மேற்கொண்டார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் மத்தேயோ மரியா சூப்பி அவர்கள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் நெருக்கத்தையும் திருப்பீடத்தின் அமைதி முயற்சிகளையும் வெளிப்படுத்தும் நோக்கில், ஜூலை 13 முதல் 15 வரை உக்ரைனில் மனிதாபிமானப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

போர்க் கைதிகள் பரிமாற்றம், ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் உக்ரைன் குழந்தைகளை மீட்பது மற்றும் போரில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீண்டும் குடும்பங்களிடம் ஒப்படைப்பது போன்ற மனிதாபிமான முயற்சிகளில் திருப்பீடம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

ஜூலை 15 அன்று நடைபெற்ற கீவியன் ரஸ் திருமுழுக்கு விழா மற்றும் உக்ரைன் அரசுரிமை தின நிகழ்விலும் கர்தினால் சூப்பி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் அதிபர் வொலோதிமிர் செலென்ஸ்கி, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன் மற்றும் பல்வேறு சமயத் தலைவர்கள் பங்கேற்றனர்.

சிவப்பு ரோஜா மலர்களை சமர்ப்பித்து போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கர்தினால் சூப்பி அவர்கள், புனித விளாடிமிர் உக்ரைன் மற்றும் ரஷ்ய தலைவர்களின் மனங்களை ஒளியூட்டி, நீதி மற்றும் அமைதிக்கான வழியைத் திறக்க இறைவனிடம் செபித்தார்.

ல்விவ் பகுதியில் அரசு அதிகாரிகள், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் சாந்த் எஜிடியோ சமூக உறுப்பினர்களைச் சந்தித்த அவர், இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியதுடன், உக்ரைன் மக்களுடன் திருத்தந்தை அவர்கள் ஒற்றுமையுடனும் செபத்துடனும் இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

16 ஜூலை 2026, 12:34