ஐஓஆர் (IOR) தலைமையகம் ஐஓஆர் (IOR) தலைமையகம் 

வத்திக்கான் வங்கி (IOR) புதிய தலைமை இயக்குநராக ஜியோவன்னி போஸ்சியா நியமனம்

வத்திக்கான் வங்கியின் புதிய தலைமை இயக்குநராக (Director General) ஜியோவன்னி போஸ்சியா அவர்கள் (Giovanni Boscia) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

வத்திக்கானின் சமயப்பணிகளுக்கான நிறுவனம் (Institute for the Works of Religion – IOR) எனப்படும் வத்திக்கான் வங்கியின் புதிய தலைமை இயக்குநராக (Director General) ஜியோவன்னி போஸ்சியா அவர்கள் (Giovanni Boscia) நியமிக்கப்பட்டுள்ளார் என்றும்,  அவர் 2026 அக்டோபர் 1 முதல் தனது பொறுப்பை ஏற்கவுள்ளார் என்றும்  IOR நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய தலைமை இயக்குநரான ஜியான் பிராங்கோ மம்மீ அவர்கள் (Gian Franco Mammì), 11 ஆண்டுகளாக ஆற்றிய பணிக்குப் பிறகு, கட்டாய ஓய்வு வயதை எட்டுவதால், 2026 செப்டம்பர் 30 அன்று தனது பதவிக்காலத்தை நிறைவு செய்கிறார்.

இந்த நியமனம், IOR-இன் மேற்பார்வை வாரியத்தால் (Board of Superintendence) மேற்கொள்ளப்பட்டு, கண்காணிப்பு கர்தினால்கள் ஆணையத்தின் (Supervisory Cardinals’ Commission) ஒப்புதலையும் பெற்றுள்ளது. மேற்பார்வை, நிர்வாகம் மற்றும் செயல்பாட்டு பொறுப்புகள் தெளிவாகப் பிரிக்கப்பட்ட ஆளுகை முறையின் அடிப்படையில், வெளிப்படைத்தன்மையையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்யும் வகையில் இந்த நியமனம் அமைந்துள்ளதாக IOR நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

55 வயதான ஜியோவன்னி போஸ்சியா அவர்கள், 2019ஆம் ஆண்டு IOR-இல் நிதித்துறைத் தலைவர் மற்றும் தலைமை நிதி அலுவலராக (CFO) இணைந்தார். பின்னர் 2021ஆம் ஆண்டு, முதலீட்டு நிர்வாகப் பொறுப்பையும் ஏற்று, முதலீட்டுத் துறைத் தலைவராக (Head of Investments) பணியாற்றினார். 2023 முதல், IOR-இன் துணை தலைமை இயக்குநராக (Deputy Director General) செயல்பட்டு வந்தார்.

அனைத்துலக நிதிச் சந்தைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட அவர், Salomon Brothers, Citigroup, RBS, Credit Suisse First Boston உள்ளிட்ட முன்னணி நிதி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். லண்டனை மையமாகக் கொண்டு முதலீட்டு வங்கித் துறையிலும், மாற்று முதலீட்டு நிதிகளுக்கான மூத்த போர்ட்ஃபோலியோ மேலாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

IOR-இல் சேருவதற்கு முன்பு, Quaestio Capital SGR நிறுவனத்தில் நிலையான வருமானம் மற்றும் கடன் முதலீட்டுப் பிரிவின் (Fixed Income & Credit) தலைவராக பணியாற்றிய போஸ்சியா அவர்கள், பொக்கோனி பல்கலைக்கழகத்தில் (Bocconi University) சிறப்புடன் பட்டம் பெற்றவர். மேலும், London Business School-இல் நிதித்துறையில் முதுகலைப் பட்டமும், Executive MBA பட்டமும் பெற்றுள்ளதுடன், CFA, CAIA மற்றும் FRM உள்ளிட்ட அனைத்துலக தொழில்முறை தகுதிகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

16 ஜூலை 2026, 12:12