உக்ரைனில் போரின் மத்தியில் பிறரன்பின் பணியை முன்னெடுக்கும் சமுதாய சமையலறை
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
உக்ரைன் நாட்டின் ரைவன் மாநிலத்தில் உள்ள பெரெஸ்டியாவில் செயல்படும் ஒரு சமுதாய சமையலறைக்கு திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கான அலுவலகம் நிதி உதவி வழங்கியுள்ளது. இச்சமையலறை முன்களத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு சத்தான உணவுகளைத் தயாரித்து வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 20, வியாழனன்று, உக்ரைனில் உள்ள திருத்தந்தையின் அரசுத் தூதரகத்தின் பணியாளரான அருள்பணி விக்டர் பிலூஸ் அவர்கள் இச்சமையலறையைப் பார்வையிட்டு, பிறரன்புப் பணிக்கான திருப்பீடத் துறையின் சார்பில் உதவிகளை வழங்கினார்.
இந்த சமூக சமையலறை முயற்சியை உக்ரைனிய தன்னார்வலர் டெட்டியானா பிஞ்சுக் தொடங்கினார். அவர் அருகிலுள்ள சமூகங்களைச் சேர்ந்த ஏறத்தாழ பத்து பெண்களை ஒருங்கிணைத்து, சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய பைகளில் நிரப்பி சேமித்து வருகிறார். பின்னர் இந்த உணவுகள் கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பெட்டிகளில் அடைக்கப்பட்டு, முன்களத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் வீரர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
குறைந்த வளங்கள் மட்டுமே இருந்தபோதிலும், தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பு மற்றும் இறைப் பாதுகாப்பின் மீதான அவர்களின் நம்பிக்கை ஆகியவை அருள்பணி பிலூஸ் அவர்களை பெரிதும் நெகிழ வைத்தன. தன்னார்வலர்கள் ஆர்த்தடாக்ஸ் மற்றும் சீர்திருத்தத் திருஅவையினர் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கான அலுவலகத்தில் இருந்து கிடைத்த இந்த உதவிக்கு அவர்கள் பெரிதும் நன்றியுள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் ஒன்றாக இறைவேண்டல் செய்து உணவை ஆசீர்வதித்தனர் மற்றும் வீரர்களுக்காகவும் இறைவேண்டல் செய்தனர்.
இந்த உதவி உடனிருப்பின் அடையாளமாகவும் செயல்பட்டு, இதேபோன்ற முயற்சிகளை ஆதரிக்க மற்றவர்களையும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
போருக்கு மத்தியிலும் தேவையில் உள்ளவர்களை சென்றடையக்கூடிய உலகளாவிய திருஅவையின் அழகையும் செயல்திறனையும் இத்தகைய திட்டங்கள் நிரூபிக்கின்றன என்று அருள்பணி பிலூஸ் அவர்கள் வலியுறுத்தினார்.
"எவ்வளவு சிறியதாக இருந்தாலும், இது போன்ற முயற்சிகளை ஆதரிப்பது மிகவும் முக்கியம்," என்று கூறிய அவர், அவர்களின் பணி வீரர்களுக்கு நல்ல, சத்தான உணவு மற்றும் உறுதியான ஆதரவை வழங்குகிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.