காசா குழந்தைகள் காசா குழந்தைகள்   (AFP or licensors)

2025-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 13 பாலஸ்தீனிய குழந்தைகள் உயிரிழப்பு!

மோதல் தொடர்பான வன்முறைகள் மேற்குக் கரையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மத்தியில் மரணத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன : யுனிசெஃப் நிறுவனம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2025-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மேற்குக் கரையில் 13 பாலஸ்தீனிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 12, இப்புதனன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் இத்தகவலை வழங்கியுள்ள இந்நிறுவனம், கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்நாள் வரை மொத்தம் 195 பாலஸ்தீனிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் உரைக்கிறது அந்நிறுவனம்.

இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக வன்முறைகள், அதிலும் குறிப்பாக, ஜெனினில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடும் அவ்வறிக்கை, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்வதற்கும், அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதற்கும், ஏறக்குறைய 100 பள்ளிகளில் மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கும் இவ்வன்முறைகளே வழிவகுத்ததாகவும் எடுத்துக்காட்டுகிறது.

இந்நிலையில், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் கண்டிப்பதாகக் கூறியுள்ள அந்நிறுவனம், பொதுமக்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  அவ்வறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் கட்டுப்பாடுகளற்ற மனிதாபிமான அணுகலுக்கு அழைப்பு விடுத்துள்ள இந்நிறுவனம், இப்பகுதியில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த ஒரு நீடித்த அரசியல் தீர்வின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் மையமாக மேற்குக் கரை (West Bank) உள்ளது. பாலஸ்தீனியர்கள் அதை காசா பகுதியின் இதயமாகக் கருதுகின்றனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 பிப்ரவரி 2025, 15:49