உதவித் தடைகளால் காசாவில் குழந்தைகள் அனுபவிக்கும் துயர்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பாலஸ்தீனத்தில் உதவித் தடைகளை அனுபவித்துவரும் காசா பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் குழந்தைகளின் நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது யுனிசெப் அமைப்பு.
கடந்த மாதத்தில் 75 விழுக்காட்டு குடும்பங்கள் குடிநீர் பெறமுடியா நிலை இருந்ததாகவும், இதனால் வயிற்றுப்போக்கு உட்பட்ட நோய்கள் பரவிவருவதாகவும், காசாவில் காணப்படும் நோய்களுள் 4ல் ஒன்று வயிற்றுப்போக்கு தொடர்புடையதாக இருப்பதாகவும் யுனிசெப் என்னும் ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அவசரகால நிதி அமைப்பு அறிவித்துள்ளது.
இவ்வாண்டு துவக்கத்திலிருந்து ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மிகத் தீவிர சத்துணவு பற்றாக்குறையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் யுனிசெப் அமைப்பு, 18 மாதங்களான மோதலும், அப்பகுதிக்கு உதவிகளைக் கொண்டுச் செல்வதற்கான தடைகளும் குழந்தைகளை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளன என மேலும் உரைக்கிறது.
மோதல் சூழலிலும் காசா பகுதியிலேயே தங்கியிருக்கும் யுனிசெப் அமைப்பு, குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் அவர்களுக்கு உதவுவதிலும் தன்னாலான அனைத்தையும் ஆற்றி வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான உதவித் தடைகளை அகற்றுதல், காசா பகுதியில் வணிகப் பொருள்களை அனுமதித்தல், பிணையக்கைதிகள் விடுவிக்கப்படல், குழந்தைகள் பாதுகாக்கப்படல் போன்றவைகளுக்காக மீண்டும் தங்கள் குரலை எழுப்புவதாக யுனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்