இலங்கை குழந்தைகள் இலங்கை குழந்தைகள்  (ANSA)

இலங்கையில் குழந்தைகளின் நலன் காக்கும் தடைகள் அமல்

குடும்ப வறுமை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பெரும்பாலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்கள் குழந்தைகளின் கூடுதல் வருவாயை நம்பியுள்ளன.

சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்

இலங்கையில் ஜூலை 1ஆம் தேதி முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிச்சை எடுப்பது, தெருக்களில் வியாபாரம் செய்வது மற்றும் வீட்டு வேலை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும், அதே நேரத்தில் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆபத்தான வேலைகள் செய்ய தடைசெய்யப்பட்டுள்ளன எனவும் ஆசியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூன் 25ஆம் தேதி புதன்கிழமை அன்று வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ, ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மாநாட்டின்படி, 18 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு நபரும் சட்டப்பூர்வமாக அவர்கள் ஒரு குழந்தைதான் என வலியுறுத்தியதாகவும்,  மேலும் இலங்கை மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் குழந்தைகள் எனவும் குறிப்பிட்டார்.

ஐ.நா.வின் குழந்தை உரிமைகள் குறித்த இலக்கை அடைய தற்போதுள்ள சட்டங்களை கண்டிப்பாக அமல்படுத்துவோம் என்றும், புதிய விதிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு பெரிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்குவோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இலங்கையில் குழந்தைகள்  தொழிலாளர்களாக மாற,  குடும்ப வறுமை காரணம் என்று கூறும் அரசு,  குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பெரும்பாலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்கள் குழந்தைகளின் கூடுதல் வருவாயை நம்பியுள்ளதாகவும்,  குடும்ப சுழல்களினால்  ஆண்களும் பெண்களும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு  தள்ளப்படுகின்றனர்  என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தரமற்ற கல்வி, பெற்றோரை இழப்பது, பெற்றோரின் இடம்பெயர்வு மற்றும் உணர்வுபூர்வமான  துயரங்கள் ஆகியவையும் குழந்தைகள் முன்கூட்டியே பணியிடத்தில் நுழைய வழிவகுப்பதாகவும், இந்த சூழ்நிலைகள்  பெரும்பாலும் சிறுவர் மற்றும் சிறுமிகளை போதுமான ஆதரவு இல்லாமல் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாக்குகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது ஆசியா செய்தி நிறுவனம்..

மேலும், வறுமையின்  காரணமாக இலங்கையில் 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்களில் வாழ்கின்றனர் எனவும்,  இங்கு  குழந்தைகளுக்கு ஏற்ற  சூழல்கள் இல்லை எனவும், மேலும் குழந்தைகள் வேலை செய்யும் இடத்தில் மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எடுத்துரைத்துள்ளது அச்செய்தி நிறுவனம்.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான விதிமுறைகளை  அரசு  ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும்,  குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நலனைப் பாதுகாப்பதில்  கவனம் செலுத்தப்பட்டாலும், நாட்டில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் சவால்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது அச்செய்தி நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஜூலை 2025, 15:55