வாரம் ஓர் அலசல் - ஹிரோஷிமா தினம்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
நம் வாழ்வு இயல்பாகவே அன்பும் அமைதியும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்றே மனிதர்களாகிய நாம் எப்போதும் எதிர்பார்க்கிறோம். ஆனால் நம் வாழ்க்கையில் அடிக்கடி சண்டை, தகராறு, பகை மற்றும் போர் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. நமக்குள் நாம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல் இருப்பதே இதற்கு ஒரு காரணம். ”அமைதியாக இருப்பவர்கள் எல்லோரும் விவரம் தெரியாதவர்கள் இல்லை, எதற்கும் பயந்தவர்களும் அல்ல, அனுசரிக்க தெரிந்தவர்கள்” என்பதை புரிந்துகொண்டுச் செயல்படுகிறோமா? "தனக்குத் தெரிந்தவற்றை மட்டும் மனிதன் பேசுவானாகில் உலகில் முழு அமைதி நிலவும்” என்றார் பெர்னாட்ஷா. மனிதன் இன்னும் புரிந்துகொள்ளவில்லை, எப்போது பேசவேண்டும், எப்போது அமைதியாக இருக்கவேண்டும் என்பதை, அமைதி வழியும் பேசமுடியும் என்பதை அவன் கற்றுக்கொள்ளவில்லை. பிறரை மதிக்காமல், பிறர் குரலுக்குச் செவிமடுக்காமல் தன்னலத்துடன் செயல்படும்போதுதான் முரண்பாடுகளும், மோதலும், போரும் ஏற்படுகின்றது. வரலாற்றுப் புத்தகங்களைத் திறந்து பார்த்தால் போரின் இரத்தக்கறை படியாத எந்த நாடும் இதுவரை இருந்ததில்லை. மனித உயிர்கள் சிதைக்கப்பட்டு, மனித நேயத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்ட போரில், வெற்றி என்னும் வார்த்தைக்கூட தோல்வியே என்பார் மகாகவி.
உலக வரலாற்றில் யாரும் மறக்க முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத உலகின் முதல் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நாள் ஆகஸ்ட் 6. ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி ஹிரோஷிமா தினம் நினைவு கூரப்படுகின்றது. இரண்டாம் உலகப் போரில், அமெரிக்காவின் இந்த அணுகுண்டு தாக்குதலே உலக வரலாற்றில் அதிகமான உயிர்ச் சேதங்களை ஏற்படுத்திய மற்றும் உலகிற்கு அதிகமான படிப்பினைகளைக் கற்றுத் தந்தத் தாக்குதல் ஆகும். 1939-ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் உலகப் போர், 1945-ஆம் ஆண்டு முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த நேரம் அது. ஆனால், இடைப்பட்ட இந்த ஆறாண்டு காலமும், அச்சு நாடுகள் அணியில் இடம்பெற்றிருந்த ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும், நட்பு நாடுகள் அணியில் இடம்பெற்றிருந்த பிரிட்டன், பிரான்ஸ், போலந்து ஆகிய நாடுகளுக்கும் கடுமையான போர் நடைபெற்றது.
இதில், சோவியத் யூனியனும், ஜெர்மனிக்கு எதிராக நட்பு நாடுகளுடன் இணைந்து போரிட்டது. இந்தக் கடும் போரில் இலட்சக்கணக்கான உயிர்கள் மடிந்துகொண்டிருந்த வேளையில் 1945-ஆம் ஆண்டு மே மாதம், ஹிட்லரின் ஜெர்மனி நாஜி படை, பிரிட்டனிடம் சரணடைந்ததையடுத்து பெரும்பாலான பகுதிகளில் போர் முடிந்திருந்தது. ஆனால், ஆசியாவில் போர் நீண்டுகொண்டிருந்தது. காரணம், அச்சு நாடுகள் அணியிலிருந்த ஜப்பான். 1941-ஆம் ஆண்டு டிசம்பர் 11, வரை அமெரிக்கா மறைமுகமாக பிரிட்டனுக்கு உதவி புரிந்து வந்தது. இதனால் அமெரிக்காவுக்கு பாடம் புகட்ட நினைத்த ஜப்பான் அமெரிக்க போர்க்கப்பல்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருக்கும் Pearl துறைமுகத்தை சிதைத்து விட்டால் அமெரிக்காவை ஒடுக்கிவிடலாமென நினைத்து ஜப்பானிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிய 2,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.
இதன்பின்தான் அமெரிக்கா நேரடியாகப் போரிடத் துணிந்தது. அதனால், ஜப்பான் மீது அணுகுண்டு வீசி போரை முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்தது. மேலும் இச்சூழலில், அமெரிக்கா தனது இராணுவ பலத்தை அதிகரித்து உலக நாடுகளை அச்சுறுத்த தனது வேலைகளை இரகசியமாகச் செய்து கொண்டிருந்தது. தனது வல்லரசு இலக்கை எட்ட அமெரிக்கா தேர்ந்தெடுத்த பாதை தான், உலகில் அதுவரை நடந்திடாத மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் அணுகுண்டுத் தாக்குதல். உலக வரலாற்றில் யானை, குதிரை, அம்பு, வாள், துப்பாக்கி, வெடிகுண்டுகள், போர் விமானங்கள் என்று போரிட்டுக் கொண்டிருந்த மனித குலத்திற்கு, போரின் முழு வடிவிலான கோர முகத்தைக் காட்டியது, முதல் அணுகுண்டு தாக்குதல் என்றால் அது மிகையாகாது. ''வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும்'', உள்ளே அடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும் என்பது போல் அமெரிக்கா பொறுத்திருந்து பழி தீர்த்தது.
உலகில் முதன் முதலில் சூரியன் உதிக்கும் நாடான ஜப்பான் நாட்டில் 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி அன்றும் அவ்வாறே வழக்கம் போல் சூரியன் உதித்தது. ஆனால் ஹிரோஷிமாவின் மக்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள், அந்த நாளே அம்மக்களின் வாழ்வை, தலைமுறைதோறும் துயரத்தில் ஆழ்த்தப் போகும் பாழ்மிகுந்த நாள் என்று. அன்று காலை 08:15 மணியளவில் ஜப்பான் மக்கள் சிறிதும் எதிர்பாராத வேளையில், எனோலாகே எனும் விமானத்தில் அமெரிக்கா எந்தவொரு முன்னெச்சரிக்கையுமின்றி, ஹிரோஷிமாவில், பத்தடி உயரமும், 71 அடி விட்டமும், யுரேனியம்-235 நிரப்பப்பட்ட, 4,100 கிலோ எடைகொண்ட, லிட்டில் பாய் (Little Boy) எனும் முதல் அணுகுண்டை 31,000 அடி உயரத்திலிருந்து வீசியது. குண்டு விழுந்த வினாடியில் 500 மீட்டர் சுற்றளவில் இருந்த மக்கள் அனைவரும் கனப் பொழுதில் புகையோடு காணாமல் போனார்கள். ‘யுரேனியம் 235’ குண்டு, தரையில் விழுந்த 45 வினாடிக்குள், ஏறக்குறைய 5 மைல் சுற்றளவிற்கு ஹிரோஷிமா நகரின் 60 விழுக்காட்டு பகுதிகளை கண் மூடித் திறப்பதற்குள் தரை மட்டமாக்கியது. அணுகுண்டு விழுந்த இடத்திலிருந்து, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 60,000-க்கும் மேற்ப்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் அணுகுண்டு வெடித்த இடத்தில் 5000 பாரன்ஹீட் வெப்பநிலை இருந்ததால் 1,40,000 பேர் உடனடியாக உடல்கருகி உயிரிழந்தனர். இந்நிலையில் குண்டு வெடித்த துயரம் அடங்கியிருந்தாலும், கதிர்வீச்சின் தாக்கம் விட்டபாடில்லை, இதில் அந்த நகரை விட்டுத் தள்ளியிருந்த பல ஆயிரம் மக்களும் பலியாகினர்.
குண்டு வீச்சில் பலியானவர்களை விட உயிர் பிழைத்தவர்கள் நிலை இன்னும் கடினமாக மாறியது. அனைவரும் வாந்தி, தலை சுற்றல், இரத்தப்போக்கு, முடி உதிர்வு, தீக்காயங்கள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு ஆளாகினர். குண்டுவீச்சினால் ஜப்பானின் பிற பகுதிளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் நடந்த துயரச் சம்பவத்தின் கோர நிலை உலகிற்குப் புலனாகவில்லை. நிகழ்ந்தது என்னவென்றே அறியாதிருந்த அவ்வேளையில், 16 மணிநேரம் கடந்து, அமெரிக்கா அணு குண்டு வீசியதை அறிவித்தது. ஜப்பான் சரணடைய காலம் தாழ்த்தியதால், அம்மக்கள் ஹிரோஷிமாவின் இழப்பை முழுவதுமாக உணர்வதற்குள் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அதாவது ஹிரோஷிமா தாக்கப்பட்ட அடுத்த இரண்டு நாட்களில் Fat Man என்று பெயரிடப்பட்ட மற்றுமொரு அணுகுண்டை நாகசாகி பகுதியில் வீசியது அமெரிக்கா. அன்றைய தினம் மட்டும் நாகசாகியில் 40,000 பேர் உயிரிழந்தனர். மேலும் அடுத்தடுத்து வீசப்பட்ட அணுகுண்டுகளால் ஹிரோஷிமாவில் 13 சதுர கிலோமீட்டர் பரப்பும், நாகசாகியில் 6.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் முற்றிலும் நாசமானது.
கல்லறைகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இரண்டு இடங்களும் காணப்பட்டதாக ஜப்பான் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அணுகுண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் இன்றும் ஜப்பானில் பெரும்பாலான குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளாகவே பிறக்கின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அணுகுண்டின் பயங்கரத்தை உலகிற்கு நினைவூட்டும் பொருட்டே ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமா தினம் நினைவுகூரப்படுகிறது.இயற்கை பேரிடராக இருந்தாலும் சரி, மனிதனின் செயற்கை பேரிடராக இருந்தாலும் சரி `மீண்டெழுதல்' என்று சொல்லுக்குப் பெயர்போன ஜப்பானில், இன்று அதே ஹிரோஷிமா மற்றும் நாகசாகி இரண்டும் வளர்ந்த நகரங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. மேலும், அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக, நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஜப்பான் நாட்டில் பொது விடுமுறை தினமாகப் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தினத்தின் நோக்கம் போருக்கு எதிராக, அமைதி நோக்கிய அரசியலைக் கொண்டு செல்ல வேண்டுமென்பதே ஆகும்.
இதன் ஓர் அங்கமாக தான் 1945-ஆம் ஆண்டு உலகத்தில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை உருவானது. இன்று பல்வேறு நாடுகள் தமது பாதுகாப்புக் கருதி, அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாகக் கூறுகின்றன. அன்பார்ந்தார்களே, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் அழிவு என்பது வெறும் வரலாறு அல்ல – அது ஓர் எச்சரிக்கை. அறிவியல் வளர்ச்சி மனித நன்மைக்காக இருக்க வேண்டுமே தவிர அழிவுக்காக அல்ல. அன்று ஓர் அணுகுண்டு ஜப்பானை அடிபணியச் செய்து ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களை வேண்டுமானால் அழித்து, இரண்டாம் உலகப் போரை நிறைவுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அதன் பின்னணியில் அழிந்து போனது ஒரு தலைமுறையின் கனவுகள், எதிர்காலம், மற்றும் நம்பிக்கைகள். நாம் எதிர்காலத்தை நோக்கிப் போவதற்கு, நடந்தேறிய நிகழ்வுகளை மறக்காமல், அமைதி மற்றும் மனிதநேயம் என்பவற்றை நமதாக்க வேண்டும்.
போர் என்பது பல நேரங்களில் நீதிக்கான நெறி என நினைத்தாலும், உண்மையில் போர் என்பது ஒரு அகந்தையின் விளையாட்டு மற்றும் அறிஞர் அரிஸ்டாட்டில் கூறுவது போல போர் என்பது மூடர்களின் அரசியல் ஆகும். ஏனெனில் பசிக்கும் வறுமைக்கும் தங்களை ஆளாக்கும் போரை மக்கள் ஒரு போதும் விரும்புவதில்லை. நாடுகளுக்கிடையேயான போர் என்பது முடிவல்ல, மிகப் பெரிய தோல்வி என்றுணர்ந்து, அறிவியலுக்கும், அரசியலுக்கும், மனிதநேயத்திற்கும். உண்மையான வெற்றி என்பது ஒருவர் மற்றவரை வெல்லும் போர் அல்ல; அது ஒருவரையும் காயப்படுத்தாமல் ஒரு பிரச்சனையை தீர்க்கும் அமைதி உடன்படிக்கையே.
மனித நேயம், ஒற்றுமை, அமைதி, சகிப்புத்தன்மை ஆகியவை வளர்ந்தால்தான் உலகம் நன்மை பெறும். சண்டை தவிர்ந்த வாழ்வு தான் உண்மையான மனிதநேய வாழ்வு என்பதை நாம் உணர்ந்து, அமைதிக்கான உரையாடலுக்கு வழிவகுக்க வேண்டும். போரின் முடிவில் யாரும் யாரையும் வெல்ல முடியாது என்ற புரிதலுடன் மன்னிப்பும், அன்பும், இரக்கமும் கொண்ட, போர் சூழல் அற்ற அமைதியான உலகம் உருவாக வேண்டுமென நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டுவோம்.“தவறுகளை அனுபவங்களாகக் கண்டு,, தோல்விகளை வெற்றியின் துவக்கமாகக் கொண்டு முன்னோக்கி நடைபோடுவோம். நாம் வாழும் காலம் நிகழ்காலம் மட்டுமே. நேற்று முடிந்துவிட்டது, நாளை இன்னும் வரவில்லை. எனவே, நிகழ்காலத்தில் முழு கவனத்துடன் வாழ்வதே சிறந்தது.
வாழ்க்கையில் தவறுகள் செய்வது இயல்பு. தோல்விகள் வருவதும் சகஜம். ஆனால், தோல்வியை கண்டு துவண்டுவிடாமல், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்குள் இருக்கும் பலத்தை உணர்வோம். அமைதிக்காக ஒன்றிணைந்து உழைப்போம். இனியொரு ஹிரோஷிமா நாகாசாகி ஒருபோதும் வேண்டாம் என ஒன்றிணந்து சபதமெடுப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்