உணவிற்காகக் காத்திருக்கும் காசா மக்கள் உணவிற்காகக் காத்திருக்கும் காசா மக்கள்   (AFP or licensors)

கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படும் காசா பகுதி மக்கள்

காசாவில் தற்போது கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மூன்றில் ஒருவர் உணவின்றி வாடுகின்றனர். - சாய்பன்

மெரினா ராஜ் – வத்திக்கான்

காசாவில் உணவுப் பஞ்சத்தின் அபாயம் கடுமையாக உள்ளது, நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என்றும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு 16.5 விழுக்காட்டினைத் தாண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் யுனிசெஃப் துணை இயக்குநர் Ted Chaiban  

ஆகஸ்ட் 2, சனிக்கிழமை வெளியிட்ட யுனிசெஃப் அறிக்கையின் தகவல்களில் இவ்வாறு தெரிவித்துள்ள சாய்பன் அவர்கள், 3,20,000க்கும் மேற்பட்ட இளம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தில் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

22 மாதங்களாக நடைபெற்று வரும் போரினை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று பகிர்ந்துகொண்ட சாய்பன் அவர்கள், மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மனிதாபிமானமற்றது என்றும், குழந்தைகளுக்குத் தேவையானது நீடித்த போர் நிறுத்தம் மற்றும் அரசியல் ரீதியாக வெளியேறுவதற்கான வழி என்றும் எடுத்துரைத்துள்ளார்.

போரின் தொடக்கத்திலிருந்து, காசாவில் 18,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், ஒரு நாளைக்கு ஏறக்குறைய 28 குழந்தைகள் அதாவது ஒரு பள்ளியின் ஒரு வகுப்பிற்கு சமமானக் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர், அவர்கள் பசி, பயம் மற்றும் அதிர்ச்சியில் உள்ளனர் என்று எடுத்துரைத்துள்ள சாய்பன் அவர்கள், காசாவில் தற்போது கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் மூன்றில் ஒருவர் உணவின்றி வாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

உணவிற்காக வரிசையில் நின்றபோது, இஸ்ரயேலிய வான்வழித் தாக்குதலால் பத்து குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் 19 பேர் காயமடைந்தனர் என்று  பகிர்ந்துள்ள சாய்பன் அவரர்கள், தான் சந்தித்த குழந்தைகள் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல மாறாக அவர்கள் பட்டினியால், குண்டுவீச்சால் இடம்பெயர்ந்தவர்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இஸ்ரேல் அறிவித்த போர் நிறுத்தத்திற்குப் பிறகு, மனிதாபிமான அணுகல் ஓரளவு எளிதாக்கப்பட்டுள்ளது என்றும், எகிப்து, ஜோர்டான், அஷ்டோட் மற்றும் துருக்கி இடையேயான பகுதிகளில் நிவாரணப் பொருட்களுடன் கூடிய 1,500 க்கும் மேற்பட்ட லாரிகள் தயாராக உள்ளன என்றும் தெரிவித்துள்ளார் சாய்பன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான தங்களது பணியின் பெரும்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், எருசலேம் மற்றும் டெல் அவிவில் உள்ள இஸ்ரேலிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார் சாய்பன்.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான இராணுவ ஈடுபாட்டு விதிகளை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளதாகவும், ஊட்டச்சத்து மையத்தில் வரிசையில் காத்திருக்கும்போது அல்லது தண்ணீர் சேகரிக்கும் போது குழந்தைகள் கொல்லப்படக்கூடாது, என்று வலியுறுத்தியுள்ளதாகவும் எடுத்துரைத்துள்ளார் சாய்பன். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஆகஸ்ட் 2025, 11:12