போர்ச்சூழல் நிறைந்த இஸ்ரயேல் பகுதி போர்ச்சூழல் நிறைந்த இஸ்ரயேல் பகுதி   (AFP or licensors)

காசாவில் நடைபெறும் வன்முறை ஓர் இனப்படுகொலை

ஏறக்குறைய 65,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 20,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள். காசாவின் தெருக்களில் இடிபாடுகளுக்கு அடியில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் . ஐ. நா அறிக்கை

மெரினா ராஜ் – வத்திக்கான்

காசாவில் நாம் காண்பது முன்னோடியில்லாத மனிதாபிமான பேரழிவு மட்டுமன்று, குறிப்பிட்ட மக்கள் கொல்லப்படும் ஓர் இனப்படுகொலை என்றும் தெரிவித்துள்ளது ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு விசாரணை ஆணையம்.

செப்டம்பர் 17, புதனன்று ஐக்கிய நாடுகள் அவையின் பன்னாட்டு விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், காசாவில் செயல்படும் 20க்கும் மேற்பட்ட மனிதாபிமான அமைப்புகளை அவசர நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது அவ்வறிக்கை.

இஸ்ரேல் நாட்டிற்குள் உள்ளவர்கள் உட்பட உலகளவில் வளர்ந்து வரும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் தலைவர்களுடன் இந்த ஆணையம் இணைகிறது என்றும், 80 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா.விடம் ஒப்படைக்கப்பட்ட ஆணைக்கு ஏற்ப செயல்பட அனைத்து உறுப்பு நாடுகளையும் அழைப்பதாகவும் அவ்வாணையத்தின் அறிக்கை எடுத்துரைக்கின்றது.

காசாவில் நிலவும் மனிதாபிமானமற்ற சூழ்நிலையை கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும், மனிதாபிமானத் தலைவர்கள் மற்றும் அமைப்புகளாக, காசா மக்களின் கொடூரமான மரணங்களையும் துன்பங்களையும் நேரடியாகக் கண்டவர்களின் முறையீடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கான உயிர்கள் ஆபத்தில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய 65,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 20,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் என்றும், காசாவின் தெருக்களில் இடிபாடுகளுக்கு அடியில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

21 இலட்சம் மக்கள்தொகையில், பத்து பேரில் ஒன்பது பேர் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், பெரும்பாலும் பல முறை - மனித உயிர்வாழ்வை ஆதரிக்க முடியாத அளவுக்கு சிறிய நிலங்களுக்கு மக்கள் இடம்பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது அவ்வறிக்கை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 செப்டம்பர் 2025, 16:20