புன்னகை புன்னகை  

வாரம் ஓர் அலசல் – உலக புன்னகை தினம்

ஹார்வி பால், வொர்செஸ்டர், மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஒரு வணிகக் கலைஞர், 1963-ஆம் ஆண்டு முதன் முதலில் புன்னகை முகமாகிய ஸ்மைலி உருவத்தினை உருவாக்கினார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

புன்னகை அக அழகை கூர்மைப்படுத்தி, புற அழகுக்கு மெருகூட்டுவது. மழலையின் சிரிப்பில் மயங்காதவரும்,மட்டற்ற மகிழ்ச்சியில் புன்னகைக்காதவரும் இல்லை. புன்னகை ஓர் மருந்து. இலவச மருந்து, இயற்கை மருந்து. வாழ்விற்கு ஊட்டம் அளிக்கக்கூடிய சத்து மருந்து. இம்மருந்தின் பற்றாக்குறையினால் தான் பலருக்கு வாழ்வில் நலமே இல்லை. உலக புன்னகை தினமானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பிக்கப்படுகின்றது எனவே இன்றைய நம் வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியில் உலக புன்னகை தினம் பற்றியக் கருத்துக்களைக் காண்போம்.

உலகத்தை நாம் வாழ்வதற்கான  சிறந்த இடமாக மாற்ற புன்னகை பயன்படுகின்றது. மன அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான மிக எளிய வழி புன்னகை. எளிமையான ஆனால் அதே நேரத்தில் ஆற்றல் மிக்க இந்த புன்னகையானது அரவணைப்பு, மகிழ்ச்சி மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் கலாச்சார மற்றும் மொழியியல் எல்லைகளைக் கடந்து நேர்மறை மற்றும் இணைப்பின் உலகளாவிய மொழியாகவும் திகழ்கின்றது. ஒரு உண்மையான புன்னகையானது நம் சொந்த உற்சாகத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நாளையும் வாழ்வையும் ஒளிரச்செய்கின்றது. நம்மிடையே நிலவும் உறவுகளை சீர்படுத்துகிறது, பதற்றத்தை அகற்றி எளிதாக்குகிறது மற்றும் அந்நியர்களிடையே உள்ள இடைவெளிகளைக் குறைத்து அன்புறவை ஏற்படுத்துகிறது.

உலக புன்னகை தினத்தின் வரலாறு

ஹார்வி பால், வொர்செஸ்டர், மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஒரு வணிகக் கலைஞர், 1963-ஆம் ஆண்டு முதன் முதலில் புன்னகை முகமாகிய ஸ்மைலி உருவத்தினை உருவாக்கினார். இந்தப் படம், உலகெங்கும் வாழும் மக்களின் நல்லெண்ணம் மற்றும் நல்ல உற்சாகத்தின் மிகவும் காணக்கூடிய அடையாளமாக மாறியது. வருடங்கள் செல்லச் செல்ல ஹார்வி பால் தான் உருவாக்கிய சின்னத்தின் அதிகப்படியான வணிகமயமாக்கலைப் பற்றி மிகுந்த கவலைகொண்டார். தான் எந்த காரணத்திற்காக அதை உருவாக்கினாரோ அதன் உண்மையான அர்த்தமும் நோக்கமும் வணிகச்சந்தையின் தொடர்ச்சியான மறுபரிசீலனையில் தொலைந்து போனது குறித்து வருந்தினார். அந்த கவலையில்தான் உலக புன்னகை தினத்திற்கான யோசனை எண்ணம் அவருக்கு வந்தது. நாம் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாளை உலகம் முழுவதும் புன்னகைக்கும் அன்பான செயல்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். ஏனெனில் சிரித்த முகத்திற்கு அரசியல், புவியியல், மதம் என எதுவும் தெரியாது.

முதல் உலக புன்னகை தின கொண்டாட்டம் 1999 ஆம் ஆண்டு வொர்செஸ்டர் இல் நடத்தப்பட்டது, மக்கள் இரக்கச் செயல்களைச் செய்வதற்கும் மகிழ்ச்சியைப் பரப்புவதற்கும் எளிமையாகச் சிரித்து மகிழ்ச்சியைப் பரப்புவதற்கும் அந்த நாள் வழிவகுத்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

2001-ஆம் ஆண்டு ஹார்வி பால் இறந்த பிறகு, ஹார்வி பால் வேர்ல்ட் ஸ்மைல் அறக்கட்டளை என்ற ஒன்று உருவாக்கப்பட்டு அவரது பெயரையும் நினைவையும் போற்றும் வகையில் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் உலக புன்னகை தினத்தின் அதிகாரப்பூர்வ ஆதரவாளராக இந்த அறக்கட்டளையில் செயல்பாடுகள் தொடர்கின்றன.

உலக புன்னகை தினத்தின் முக்கியத்துவம்

ஒருவரின் நாளை பிரகாசமாக்குவதற்கும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு எளிய புன்னகை உதவுகின்றது. நமது ஆற்றல்களை நாம் நினைவுகூர்ந்து செயல்படுத்தும் அதே வேளையில், மற்றவர்களைப் பார்த்து புன்னகைப்பதன் வழியாகவும், கருணைச் செயல்களைச் செய்வதன் வழியாகவும் நல்லெண்ணத்தையும் நேர்மறையையும் மேம்படுத்துவதை உலக புன்னகை தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

புன்னகை என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு. ஆரோக்கியமான மனிதனிடமிருந்து புன்னகை வெளிப்படும். இது மனிதனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. அண்மையில் வலைதளத்தில் பகிரப்பட்ட காணொளியானது, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை உருக்கியது. அதைப் பகிர்ந்தவர் சஞ்சிதா அகர்வால். அந்த காணொளியில், சஞ்சிதா தனது வாகனத்தை ஓட்டி கொண்டிருக்கும்போது சாலையின் ஓரத்தில் தனியாக நின்றிருந்த ஒரு முதிய பெண்மணியைக் கவனிக்கிறார். சிறிது தயக்கத்துடன் காரை நிறுத்தி, ஒரு புன்னகையுடன் அந்தப் பெண்மணியிடம் உதவி ஏதேனும் தேவைப்படுகிறதா என்று கேட்கிறார். முதிய பெண்மணியின் கண்களில் ஒரே நேரத்தில் ஆச்சரியமும் நன்றியுணர்வும் தெரிகிறது. காரின் கதவு திறக்கப்பட்டவுடன், அவரின் முகத்தில் மலர்ந்த புன்னகை, அந்தச் சிறிய தருணத்தை மந்திரமாக மாற்றுகிறது. சஞ்சிதா எங்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, அந்தப் பெண்மணி மெதுவாக, "ஜீவன் பாரதி" என்று பதில் அளிக்கிறார். பெண்மணி காரிலிருந்து இறங்கும் தருணத்தில் மெதுவாக, கவனமாக இறங்குகள் என்று சொல்கிறார். அதற்குப் பதிலாக, அந்த முதியவர் மீண்டும் புன்னகை செய்கிறார். அந்தப் புன்னகையின் வழியாக நன்றியும் அன்பும் மட்டுமல்ல, "இந்த உலகத்தில் இன்னும் நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள்" என்ற நம்பிக்கையும் என்பதை வெளிப்படுத்துகின்றார்.

ஒரு சிறிய புன்னகை ஒரு நாளையே அல்ல, ஒரு வாழ்க்கையையே மாற்றும் சக்தி கொண்டது என்பதை நம்மில் ஒவ்வொருவருக்கும் நினைவூட்டுகிறது மனிதாபிமானம் இன்னும் உயிரோடு இருக்கிறது, அதைப் பரப்பும் பொறுப்பு நமக்கெல்லாம் உண்டு. புன்னகை மனித உணர்வின் வெளிப்பாடு. இது புன்னகைப்பவருக்கும் அதைப் பார்ப்பவருக்கும் புத்துணர்வு, நேர்மறை ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையைக் கொடுக்கின்றது. மனிதர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு புன்னகை. இதனால் அழகும் ஆரோக்கியமும் மேம்படும். உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியின் இன்பத்தைக் கொடுக்க வேண்டும் பகிர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நாளானது கொண்டாடப்படுகின்றது.

புன்னகை செய்ய எந்த வலுவான காரணமும் அவசியம் இல்லை. விளையாடும் குழந்தை, செல்லப்பிராணிகள், பூக்கள், மழை, வெயில் அடிக்கும்போது வீசும் குளிர்ந்த காற்று என சிறு சிறு நிகழ்வுகள் புன்னகைக்கு வழிவகுக்கும். சிரு புன்னகையின் வழியாக மனம் அமைதி அடையும். புன்னகைக்கும் போது முகத்தில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றது. இதனால் எதிர்மறை உணர்வுகள் குறையும் நம்பிக்கை அதிகரிக்கும் சிறு புன்னகையின் வழியாக வாழ்வின் மகிழ்ச்சியை உணரலாம்.

நம்மிலும் நம்மைச் சுற்றிலும் மகிழ்ச்சியைப் பரப்புவதற்கும் இரக்கச் செயல்களை ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மனதைத் தொடும் உலகளாவிய கொண்டாட்டம் உலக புன்னகை தினம் ஆகும். புன்னகையின் எளிமையையும், ஆற்றல் மிக்க தாக்கத்தையும், அது நமக்கும் மற்றவர்களுக்கும் கொண்டு வரக்கூடிய மகிழ்ச்சியையும் நமக்கு நினைவூட்டுகிறது இந்நாள். புன்னகையுடன் தொடங்கி, எளிய செயல்கள் வழியாக, மகிழ்ச்சி, கருணை மற்றும் நேர்மறையைப் பரப்புவதன் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டிக் கொள்ள வேண்டிய நேரம் இது. இந்த நாள் அனைவரும் ஒரு புன்னகையை அணிந்து உலகத்துடன் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கிறது, அவர்கள் சந்திப்பவர்களின் நாளை பிரகாசமாக்குகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அதாவது, 2025 ஆம் ஆண்டில், அக்டோபர் 3 அன்று சிறப்பிக்கப்படும் இந்நாளானது மனமகிழ்ச்சியையும் நேர்மறையான எண்ணமும் கொண்டு வாழ நமக்கு வலியுறுத்துகின்றது.

புன்னகையோடு வாழ்வோம் 

மீனவன் ஒருவன் தினமும் கடலில் மீன் பிடித்து அதை விற்ற பணத்தில் குடும்பம் நடத்தினான். பாடுபட்டாலும் வாழ்வில் அவன் வாழ்வில் மகிழ்ச்சி சிறிதுமில்லை. அவனது முகம் எப்போதும் கடுகடுப்பாகவே இருக்கும். ஒருநாள் அவன் இளமைக்கால நண்பனை சந்தித்தான். அவனுடைய வருமானம், குடும்ப சூழ்நிலைகளை கேட்டறிந்தான். ஏழ்மையில் அவன் தத்தளிப்பது தெரிந்தது. ஆனாலும் புன்னகையுடன் காட்சியளித்தான். அன்றிரவு மீனவனுக்கு உறக்கம் வரவில்லை. நண்பனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். 'நண்பனுக்கு வருமானம் குறைவு; வாழ்வில் பிரச்னைகள் அதிகம். ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறானே' என யோசித்தான். குழப்பம் தீரவில்லை. அந்த ஊரில் துறவி ஒருவர் இருந்தார். ஊராரின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு சொல்லி வந்தார். மீனவனும் துறவியின் உதவியை நாடிச் சென்றான். அவரை வணங்கி விட்டுத் தன் வருத்தத்தை தெரிவித்தான். அனைத்தையும் கேட்டுவிட்டு துறவி புன்னகைத்தார்.

'பதிலளிக்காமல் புன்னகைத்தபடி இருக்கிறாரே' எனக் கோபம் வந்தது. ஆனாலும் சாபம் ஏதும் இட்டால் என்ன செய்வது?' என்ற பயத்துடன் ஏதும் கேட்கவில்லை. மறுநாள் மீண்டும் துறவியைப் பார்க்கச் சென்றான். அப்போதும் துறவியிடம் இருந்து புன்னகையே பதிலாக கிடைத்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "ஐயா...என் பிரச்னைகளை தெரிவித்தேன். நீங்களோ தீர்வு சொல்லாமல் புன்னகை மட்டும் செய்கிறீர்கள். இதற்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டான்.

"உன்னுடைய வருமானத்தை குறைவாக நினைக்கிறாய். அதே நேரம் உனக்கு வரும் பிரச்னைகளை அதிகமாக சிந்திக்கிறாய். உலகத்தில் பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை. கிடைக்கும் வருமானம் மட்டும் போதும் என்று சொல்பவர்களும் இல்லை. இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்பவனே நல்ல மனிதன். ஆசை கொள்வதில் தவறில்லை என்றாலும், பேராசை ஆபத்தில் முடியும். பிரச்னைகள் மட்டுமே உன் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. அதனால் உனக்கு சிரிப்பு என்பதே மறந்துவிட்டது. அதையே நினைவுபடுத்தினேன். எந்த பிரச்னை வந்தாலும் அதை புன்னகையோடு கடந்து செல்ல முயற்சி செய். அது வாழ்வை அழகாக்கும்" என்றார். மீனவனின் மனம் தெளிவு பெற்றது. புன்னகையுடன் துறவியிடம் விடை பெற்றான்.

புன்னகை தினத்தை சிறப்பிக்க வழிவகைகள்

உலக புன்னகை தினத்தில் பங்கேற்று நமது நாளையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் பிரகாசமாக்கும் ஒரு மனதைக் கவரும் அனுபவமாகவும் மாற சில வழிகள். நமது ஒவ்வொரு நாளையும் புன்னகையுடன் தொடங்குவோம். சந்திக்கும் அனைவருடனும் நமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வோம். குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அந்நியர்களுடனும் பகிர்ந்து கொள்வோம். இரக்கச் செயல்களைச் செய்வோம். பாராட்டுக்களை வழங்குவோம். மற்றவர்களுக்கு உதவுதல் அல்லது ஒருவரின் நாளை சிறிது பிரகாசமாக்குதல் போன்ற இரக்கச் செயல்களை நீட்டிப்போம்.

புன்னகையைத் தூண்டும் செயல்பாடுகளை ஒழுங்கமைப்போம். சமூகத்தில் மகிழ்ச்சி மற்றும் நேர்மறையை ஊக்குவிக்கும் நிகழ்வுகள், பட்டறைகள் அல்லது செயல்பாடுகளை நடத்துவோம். தேவைப்படுபவர்களுக்கு புன்னகையையும் மகிழ்ச்சியையும் பரப்புவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு பங்களிக்கவும் அல்லது தன்னார்வத் தொண்டுப்பணிகளைச் செய்வோம். புன்னகைத்து வாழ்வோம் புத்துணர்ச்சியுடன் பணியாற்றுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 செப்டம்பர் 2025, 16:06