காசாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் : UNICEF - WHO - UNRWA
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
நவம்பர் 9 முதல் 20 வரை, காசாவில் நடைபெற்ற, யுனிசெஃப் அமைப்பு(UNICEF), அண்மை கிழக்கின் பாலஸ்தீன புலம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகள் அவையின் நிவாரண முகமை (UNRWA), உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) மற்றும் துணைவர்களால் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி முகாமில், 13,700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தடுப்பூசி பெற்றனர் என்று யுனிசெஃப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நலவாழ்வு அமைப்பின் ஒத்துழைப்பிலும், கவி என்ற நிறுவனத்தின் ஆதரவிலும் நடத்தப்பட்ட இந்த முகாமில், பங்கேற்ற குழந்தைகளில் 2 விழுக்காட்டிற்கும் குறைவானவர்கள் எந்தத் தடுப்பூசியையும் பெறவில்லை என்றும் ஏறக்குறைய கால் பகுதியினர் இந்த வாய்ப்பைத் தவறவிட்டனர் என்றும் தெரிவிக்கிறது அவ்வறிக்கை.
மேலும் இந்த முகாமில் ஊட்டச்சத்து பரிசோதனை இடம்பெற்றதுடன்,பரிசோதிக்கப்பட்ட 6,827 குழந்தைகளில், 508 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைவுடன் இருப்பதாகவும், அவர்கள் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
நலவாழ்வுத் தேவைகள் போதுமான அளவு இருப்பதாகவும், காசாவின் 36 மருத்துவமனைகளில் பாதி மட்டுமே பகுதியளவு செயல்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கை, உலக நலவாழ்வு நிறுவனம் 20 வகையான வசதிகளை மறுசீரமைக்கவும், அத்தியாவசிய மருந்துகளை வழங்கவும், நலவாழ்வுப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் உதவுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
காசாவின் அனைத்து குழந்தைகளும் உயிர்காக்கும் தடுப்பூசிகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஊட்டச்சத்து சேவைகளை அணுகுவதை உறுதிசெய்ய தொடர்ச்சியான ஆதரவு அவசியம் என்று தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்