உற்சாகத்தில் பெண்கள் உற்சாகத்தில் பெண்கள்   (ANSA)

வாரம் ஓர் அலசல் : இவ்வார சிறப்புத் தினங்கள்

பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் நிலையில், இந்நிலை களைந்து பெண்மையைப் போற்றி மதிக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

அன்பர்களே, இவ்வாரம் நாம் சிறப்பிக்கும் இரண்டு தினங்கள் குறித்து இந்நாளில் அறிந்துகொள்வோம். முதலில் நவம்பர் 24, திங்களன்று சிறப்பிக்கும் உலக ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தினம்! குறித்து அறிந்துகொள்வோம். ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் (Conjoined Twins) நிலையைப் பற்றி வலியுறுத்தவும், அவர்களின் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு உட்பட சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை மேம்படுத்தவும், பஹ்ரைன், மொராக்கோ, கத்தார் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்த முயற்சியை சவூதி அரேபியா முன்மொழிந்தது. இதனை ஏற்றுக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, 2024 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 24 ஆம் நாளில் 'உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் நாள்' கொண்ட்டாடப்படும் என்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (நவம்பர் 24) முதலாவது ‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் நாள்’ (World Conjoined Twins Day) கொண்டாடப்படுகிறது.

ஒட்டிப் பிறந்த இரட்டையர் (Conjoined Twins) என்போர் கருவிலேயே உடல்கள் ஒட்டிப் பிறந்த இரட்டையர் ஆவர். இது ஒரு அரிய நிகழ்வு ஆகும். 50,000 முதல் 1,00,000 வரையிலான குழந்தைப் பிறப்புகளில் ஒரு பிறப்பில் மட்டுமே இவ்வாறு நிகழும் வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இத்தகைய பிறப்புகளின் எண்ணிக்கை சற்றுக் கூடுதலாகக் காணப்படுகிறது. இவ்வாறு பிறப்போரில் ஏறக்குறைய பாதி பேர் இறந்து பிறக்கிறார்கள். ஒரு சிலர் உயிரோடு பிறந்தாலும் தொடர்ந்து வாழ்வதற்கு உரிய உடல்நிலையில் இருப்பதில்லை. ஒட்டிப் பிறந்த இரட்டையரின் ஒட்டு மொத்தப் பிழைத்திருக்கும் விகிதம் 25 விழுக்காடு  என்றே இருக்கிறது. இந்நிலை 3:1 என்ற விகிதத்தில் பெண்களிலேயே கூடுதலாகக் காணப்படுகிறது.

ஒட்டிப் பிறந்த இரட்டையர் உருவாகும் விதம் குறித்து ஒன்றுக்கு ஒன்று முரணான இரண்டு தேற்றங்கள் உள்ளன. காலத்தால் முந்திய தேற்றம், கருவுற்ற முட்டை பகுதியாக பிளப்பதால் இந்நிலை வரலாம் என்று கருதியது. அண்மைய தேற்றமோ கருவுற்ற முட்டை முற்றிலுமாக பிளந்தாலும், இரட்டையர்களில் உள்ள குருத்தணுக்கள் ஒத்த அணுக்களை நாடிக் கூடுவதால் இரட்டையர்கள் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொள்ளலாம் என்கிறது. இத்தேற்றமே பரவலான ஏற்பு பெற்றுள்ளது. ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் இருவரும் பொதுவாக ஒரே கரு வெளியுறை, சூல்வித்தகம், பனிக்குடப்பையைக் கொண்டுள்ளார்கள் என்றாலும் ஒற்றைக்கருவணு உடைய ஒட்டிப் பிறக்காத இரட்டையரும் கூட இந்த அமைப்புகளைப் பகிர்ந்து கொள்பவர்கள் தாம் என்பது குறிப்பிடத்தக்கது.

1990-ஆம் ஆண்டு ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பிரிப்பதற்கான இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, சவூதி அரேபியா இத்துறையில் உலகில் முன்னணி வகிக்கக் கூடிய நாடாக இருந்து வருகிறது. சவூதி அரேபியா, 26 நாடுகளைச் சேரந்த 139 இரட்டையர்களை பரிசீலனைக்கு உட்படுத்தியுள்ளதோடு 61 ஜோடி இரட்டையர்களை வெற்றிகரமாகப் பிரித்தும் உள்ளது. சவூதி ரோயல் கோர்ட்டின் ஆலோசகராகவும், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் (KSrelief) மேற்பார்வையாளர் ஜெனரலும், புகழ்பெற்ற குழந்தை அறுவை சிகிச்சை நிபுணருமான வைத்தியர் அப்துல்லா அல் ரபீஹ் அவர்களே சவூதி அரேபிய இணைந்த இரட்டையர் திட்டத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

உலக ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் நாளின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தும் வகையில், சவூதி அரேபியா, 2024 ஆண்டு நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 என்று இரு நாட்கள் ரியாத் நகரில் முதல் முறையாகப் பன்னாட்டு ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் 'இணைந்த இரட்டையர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களில் பிரிவினையின் பன்முகத் தாக்கத்தை ஆராய்தல்' என்ற தலைப்பில் ஒரு குழுக் கலந்துரையாடல் இடம் பெற்றது. இது பிரிவினை அறுவை சிகிச்சையின் உடலியல், உளவியல் மற்றும் சமூக விளைவுகளை ஆராயும் விதத்தலும் அமையும் என்றனர்.

ஒட்டிப் பிறந்த இரட்டையரிலேயே மிகவும் புகழ் பெற்றோர் சாங்கு மற்றும் இங்கு பங்கர் (Chang and Eng Bunker) ஆவர். தற்போது, தாய்லாந்து என்று அறியப்படுகிற சயாமில் பிறந்தவர்கள். பி.தெ. பார்னமின் வட்டரங்குடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்த இவர்கள் சயாமிய இரட்டையர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் இருவரும் உடலின் முண்டப் பகுதியில் உள்ள சதை, குருத்தெலும்பு, ஒன்றிணைந்த கல்லீரல்களால் பிணைக்கப்பட்டிருந்தனர். நவீன மருத்துவ வசதிகள் உள்ள இக்காலத்தில் ஒரு கத்தரிக்கோல் கொண்டே கூட இவர்களைப் பிரித்து இருக்கலாம். நாளடைவில் இவர்கள் பெற்ற புகழாலும் அரிதான உடல் நிலையாலும் ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்றாலே சயாமிய இரட்டையர்கள் என்று அழைக்கும் நிலை வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (நன்றி : கல்கி  ஆன்லைன்)

நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்

நவம்பர் 25, செவ்வாய்க்கிழமையன்று, பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறை ஒழிப்பு நாள் ஆகும். உலகில் ஆண்களுக்கு நிகராக நாங்களும் முன்னேற்றமடைய வேண்டும் எனும் இலட்சியப் போக்குடன் பல நாடுகளில் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் தங்களின் தன்னம்பிக்கையும் வளர்த்து சாதித்து வருகின்றனர். புதிய துறைகளில் இன்று சாதனைகளை நிலைநாட்டிவருகின்றனர்.

பெண்கள் நாட்டின் கண்கள் என சொல்லுமளவிற்கு முக்கியமானவர்கள். இறைவனின் படைப்பின் உன்னத படைப்பான பெண்கள் இந்த உலகில் ஆக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள். அவ்வாறிருக்கும் பெண்கள் பல வன்முறைகளுக்கும் முறைகேடுகளுக்கும் உட்படுத்தப்படுவது உலகில் சாதாரண விடயமாக மாறிவந்துள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25-ஆம் தேதி அனைத்துலக அளவில்  ஒரு சிறப்பு நாளாக பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகின்றது பெண்கள் அனைத்துலக அளவில் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதை தவிர்க்கும் முகமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக அனைத்துலகப் பெண்கள் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்புத் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொமினிக்கன் குடியரசில் 1960-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் நாளில் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராக இவர்கள் குரல் கொடுத்தவர்கள். ‘மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்’ என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.

1980-ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூர்வதற்காகவும், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தேர்வுசெய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக அளவில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் அனைத்துலக மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10-ஆம் தேதி முடிவடைகின்றது.

இந்தச் சகோதரிகளின் நினைவாகவே 1999-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டுதோறும் நவம்பர் 25-ஆம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினமாகப் கொண்டாடுவதற்கு அதிகாரப்பூர்வமாக தீர்மானத்தை நிறைவேற்றியது. மிராபெல் சகோதரிகளின் கதை ‘இன் தி டைம்ஸ் ஆப் பட்டர்பிளை’ (In the Time of the Butterflies) என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் உருவாகியது.

இன்றைய சமுதாயத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் பல விதங்களில் இடம்பெறுகின்றன. தொழிற்சாலைகளில் அலுவலகங்களில் மருத்துவமனைகளில் கல்விநிலையங்களில் என பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. ஆகவே, பெண்மையைப் போற்றி மதிக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 நவம்பர் 2025, 15:34