இந்திய தேசியக் கொடி இந்திய தேசியக் கொடி   (ANSA)

சிறப்பு நிகழ்வு : வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா

வந்தேமாதரம் பாடலின் 150-வது விழா திருநாளை உள்ளம் குளிர, எண்ணம் சிறக்க, மறைந்த தியாகிகள் நினைவைப் போற்றி மகிழ்ந்து, தேசபக்தி செழிக்க தமிழகமெங்கும் நம்முடைய இல்லங்கள் தோறும் கொண்டாட வேண்டும்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அன்பர்களே, நமது இந்திய நாட்டில் இன்று சிறப்பானதொரு நிகழ்வு இடம்பெறுகிறது. அதுதான்  ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு விழாக் கொண்டாட்டம். ஆகவே இந்நாள் சிறப்பு நிகழ்வாக இப்பாடலின் சிறப்புக் குறித்து அறிந்துகொள்வோம்.

வரலாற்று தோற்றம்

இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம், இந்த ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதியுடன் 150 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனைக் குறிக்கும் வகையில், ‘பாரத அன்னையே நான் உனக்குத் தலை வணங்குகிறேன்’ என்று பொருள்படும் வகையில் இந்தப் பாடல் இயக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் எண்ணற்ற தலைமுறைகளாக வந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு புத்துணர்வு அளிப்பதுடன், நாட்டுப்பற்றையும் வளர்க்க உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. நாட்டைக் கட்டமைப்பதிலும், ஒருங்கிணைந்த உணர்வுக்கான இந்தியாவின் தேசிய அடையாளச் சின்னமாகவும் திகழ்கின்றன.

பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்கள் இயற்றியுள்ள இந்த வந்தே மாதரம் பாடல் முதல் முதலாக 1875-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி பங்காதர்ஷன் என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது. பின்னர், பங்கிம் சந்திர சட்டர்ஜி உருவாக்கிய காலத்தால் அழியாத 1882-ஆம் ஆண்டு வெளியான ‘ஆனந்த மடம்’ என்ற  நாவலிலும் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் நாட்டின் நாகரீகம், அரசியல் மற்றும் கலாச்சார ஒருமைப்பாட்டிற்கு ஒருங்கிணைந்த ஓர் அங்கமாக உருவெடுத்துள்ளது. மேலும் ஒருமைப்பாடு, தியாகம், பக்தி ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், அனைத்து இந்தியர்களாலும் போற்றப்பட்டுப் பாடப்படும் பாடலாக இது அமைந்துள்ளது.

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஞானம் மற்றும் இலக்கியத்திலிருந்து பிறந்த இந்தப் பாடல் காலணிய ஆதிக்கத்திற்கு எதிரான வலுவான அடையாளமாக உருவெடுத்ததுடன் அனைவரது விருப்பங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்திருந்தது. அத்துடன் நாட்டுப்பற்று, ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார அம்சங்களை வடிவமைப்பதில் நவீன இந்தியாவிற்கான சுயவிழிப்புணர்வுடன் கூடிய பாடலாக இது அமைந்துள்ளது.

நாடு தழுவிய 150வது ஆண்டு கொண்டாட்டங்கள்

வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவை நாடு தழுவிய அளவில் கொண்டாட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கலாச்சார நிகழ்வுகள், பொது இசை நிகழ்ச்சிகள், கல்வித் திட்டங்கள் மற்றும் கண்காட்சிகள் ஆகியவை அடங்கும். சுதந்திரப் போராட்டத்தை ஊக்குவிப்பதில் இந்தப் பாடலின் பங்கை அரசு எடுத்துக்காட்டுகிறது, தேசிய பாரம்பரியத்தில் அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் அழைப்பு

'வந்தே மாதரம்' பாடலின் அர்த்தத்திற்கு ஏற்ப இந்தியாவை வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்போம் என இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் தெரிவித்துள்ளார். ஓராண்டுக்கு (2025, நவம்பர் 7 முதல் 2026 நவம்பர் 7 வரை) நடைபெறக் கூடிய தேசிய பாடல் கொண்டாட்டங்களை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற உள்ள ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

வந்தே மாதரம் என்கிற தேசபக்தி மந்திரச் சொல் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் அளவற்ற உணர்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்துகிறது. இந்தப் பாடல் தலைமுறைகளை இணைத்து, தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் விதத்தில் மக்கள் மனதில் அன்பை விதைத்துவரும் தேசிய உணர்வின் குறியீடு என்றும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமைக்கும் ‘வந்தே மாதரம்’ பாடல் ஒருங்கிணைந்த ஒரு குரலாக ஒலித்து வருகிறது. துன்பங்கள் நேரிட்ட தருணங்களில் எல்லாம் “‘வந்தே மாதரம்’ என்ற முழக்கம் நம் அனைவரையும் ஒன்றிணைத்து உற்சாகம் தருகிறது. மேலும் வந்தே மாதரம் பாடலை ஒலிப்பவர்களின் மனதில் வலிமைமிகு பாரத மாதாவின் பெருமையை, உணர்த்தி ஆற்றலை அளிக்கும் சிறப்பு கொண்டது என்று பிரதமர் உணர்வு பொங்க பேசியுள்ளார்.

வந்தே மாதரம் பாடலை எழுதிய பாங்கிம் சந்திர சட்டோபாத்யா அவர்களை நாடு என்றும் மறக்காது, அவர் நாட்டின் சுதந்திர உணர்வை ஊக்குவிக்க எழுதிய, இந்த அற்புத படைப்பு நூற்றாண்டுகளாக இந்தியாவின் உயிரோட்டமாக உள்ளது. “19-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டாலும், இந்திய மரபின் பல்லாயிரம் ஆண்டு சிந்தனையோடு இந்தப் பாடல் ஆழமாக இணைந்துள்ளது” என்றும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் அழைப்பை ஏற்று, தமிழக மக்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள தேசபக்தி இயக்கங்கள், தேசிய சிந்தனையாளர்கள் நவம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு விழாக்  கொண்டாட்டத்தை, கிராமங்கள் நகரங்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் தேசபக்தி திருவிழாவாக சிறப்பாகக் கொண்டாட அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும் எனக் கேட்டுகொள்ளபட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் கலை, இலக்கியப் போட்டிகள், சுதேசி பொருள்களை ஊக்குவிக்கும் கண்காட்சிகள் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் மிகப்பெரிய பங்கையும், தமிழக மக்களின் வீரத்தையும் விவேகத்தையும் பண்பாடு கலாச்சாரம் நாகரீகத்தையும் போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், கருத்தரங்கங்கள் என அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து பொதுமக்களில் அனைவரும் வந்தே மாதரம் பாடல் பிறந்த 150-வது ஆண்டு விழாவை தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டாடும் வண்ணம் சிறந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சாதி, மத, இன பாகுபாடு இல்லாமல் கட்சி பேதங்களை மறந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு, பல நூறு ஆண்டுகளைக் கடந்த இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தியாக வரலாற்றையும், 75 ஆண்டுகளுக்கு மேலான இந்திய சுதந்திரத்தின் மகிழ்ச்சியையும் வெற்றியையும் மனமகிழ்ந்து கொண்டாடும் வகையில், தமிழக அரசும் "வந்தே மாதரம்" திருவிழாவை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

அதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், சமூகநல இயக்கங்களும், சமுதாய அமைப்புகளும், அனைத்து சங்கங்களும் , தொண்டு நிறுவனங்களும், மக்கள் நல இயக்கங்களும் இணைந்து நவம்பர் 7-ஆம் தேதி இன்று நடைபெறும் இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களை சிறப்பாக கொண்டாடி தேசிய நீரோட்டத்தில் தமிழகத்தின் வலிமையான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று விரும்பப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் குறிப்பாக தாங்கள் வசிக்கும் பகுதியில் தங்கள் வீடுகளில், தங்கள் அலுவலகங்களில் நவம்பர் 7ஆம் தேதி அன்று தேசபக்தியை ஊட்டி வளர்த்த வந்தே மாதரம் பாடலை, குடும்பத்துடன் குழந்தைகளுடன், உறவினர்கள் நண்பர்கள், சக தொழிலாளர்களுடன் பாடி மகிழ்ந்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட அழைப்பொன்றும் விடுக்கப்பட்டுள்ளது.

சுப்ரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, தேசியக் கொடி காத்த திருப்பூர் குமரன், ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற வீரர் வாஞ்சிநாதன், வீரத்துடன் தீரத்துடன் பங்கு கொண்ட அஞ்சலை அம்மாள் என அனைவரும் சுதந்திர தீயை ஊட்டி வளர்த்த வந்தே மாதரம் பாடலை, வீடுகளிலும், தெருக்களிலும், சுதந்திரப் போராட்டங்களிலும் சென்ற இடமெல்லாம் பாடி பாரத மக்களை ஒற்றுமைப்படுத்தி இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தார்கள். இவர்களை இந்நாளில் அன்புடன் நினைவில்கொள்ள அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் வலிமை சேர்க்க அன்றும் இன்றும் என்றும் நம் நினைவில் நிற்கக்கூடிய "வந்தே மாதரம்" முழக்கமும் பாடலும் சிறுவயதில் நாம் கேட்டுப் பாடி மகிழ்ந்து தேசபக்தியோடு செயல்பட்டது போல், நம்முடைய குழந்தைகள், மாணவர்கள், இளை/யோர் இடத்திலும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பாக வந்தேமாதரம் பாடலின் 150-வது விழா திருநாளை உள்ளம் குளிர, எண்ணம் சிறக்க, மறைந்த தியாகிகள் நினைவைப் போற்றி மகிழ்ந்து, தேசபக்தி செழிக்க தமிழகமெங்கும் நம்முடைய இல்லங்கள் தோறும் கொண்டாட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 நவம்பர் 2025, 15:08