தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
டிசம்பர் 3, இப்புதனன்று, இலங்கையைத் தாக்கிய தித்வா என்னும் புயல் அங்குப் பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள வேளை, இந்தப் புயலால் ஏறக்குறைய 10 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில், 2 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அடங்குவர் என்றும் யுனிசெப் நிறுவனம் அறிக்கையொன்றில் கூறியுள்ளது.
மேலும் இந்தப் புயல் காரணமாக கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகள் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்குப் பரவலான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவ்வறிக்கை, இடம்பெயர்ந்த குடும்பங்களின் குழந்தைகள் நோய், ஊட்டச்சத்துக் குறைபாடு, பாதுகாப்பற்ற சூழல் மற்றும் ஆபத்துகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வறுமை இரட்டிப்பாகியுள்ள நிலையில், அண்மையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து அந்நாடு மீண்டு வரும்வேளை, இந்தப் பேரழிவு அங்கு மேலும் பெரும் சிரமங்களை உண்டாக்கியுள்ளது என்று கூறும் அதன் அறிக்கை, மேலும் பாதுகாப்பான நீர், உணவு, உளவியல் ஆதரவு மற்றும் அவசர உதவிகளை வழங்குவதற்காக அந்நிறுவனம் அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலால் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்குவதற்காக, உலக நாடுகளின் நிதி உதவியை அதிகரிக்குமாறு யுனிசெப் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்