போர்த்துயரில் குழந்தைகளும் அவர்தம் பெற்றோரும் போர்த்துயரில் குழந்தைகளும் அவர்தம் பெற்றோரும்  

உக்ரைனில் புலம் பெயர்ந்தோராகத் தவிக்கும் 25 லட்சம் குழந்தைகள்!

உக்ரைனில் உயிர் காக்கும் உதவிகளான தூய்மையான குடிநீர், நலவாழ்வு, ஊட்டச்சத்து, கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உளவியல் ரீதியான ஆதரவு ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்கி வரும் யுனிசெஃப் நிறுவனம், சேதமடைந்துள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் விநியோக அமைப்புகளைச் சீரமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

"உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டில் கால்பதிக்கும் நிலையில், அந்நாட்டின் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான குழந்தைகள் ஏறத்தாழ 25 இலட்சத்து 90 ஆயிரம் பேர் இன்னும் இடம்பெயர்ந்த நிலையிலேயே உள்ளனர்" என்றும் "இதில் 7,91,000 குழந்தைகள் உக்ரைனுக்குள்ளேயும், ஏறக்குறைய 18 இலட்சம் குழந்தைகள் வெளிநாடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்" என்றும் யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 17, செவ்வாயன்று,வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ள அந்நிறுவனம், "கடந்த பிப்ரவரி 2022 ஆம் ஆண்டு முதல், 3,200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்" என்றும்,  "2025-ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளின் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் 10 விழுக்காடாக அதிகரித்துள்ளன" என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், "கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவக் கட்டமைப்புகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால், மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை முழுநேர வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்றும், "கடந்த ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 200 மருத்துவ வசதிகள் சேதமடைந்துள்ளன" என்றும் அதன் அறிக்கை தெரிவித்துள்ளது.

"15 முதல் 19 வயதுக்குட்பட்ட வளர்இளம் பருவத்தினர், மூன்று பேரில் ஒருவர் குறைந்தது இரண்டு முறையாவது இடம் பெயர்ந்துள்ளனர்" என்றும், "நான்கு பேரில் ஒருவர் தங்களது எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையற்ற நிலையில் உள்ளனர்" என்றும் சுட்டிக்காட்டியுள்ள அதன் அறிக்கை, "2025-ஆம் ஆண்டில், 25 இலட்சம் குழந்தைகள் உட்பட மொத்தம் 70 இலட்சம் மக்கள் உதவிகளைப் பெற்றுள்ளனர்" என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், உயிர் காக்கும் உதவிகளான தூய்மையான குடிநீர், நலவாழ்வு, ஊட்டச்சத்து, கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உளவியல் ரீதியான ஆதரவு ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்கி வரும் யுனிசெஃப் நிறுவனம், சேதமடைந்துள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் விநியோக அமைப்புகளைச் சீரமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 பிப்ரவரி 2026, 12:03