ஈரானில் கொல்லப்பட்டவர்களுக்காக நீதி வேண்டி போராட்டம் ஈரானில் கொல்லப்பட்டவர்களுக்காக நீதி வேண்டி போராட்டம்   (AFP or licensors)

ஈரானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும்!

குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டில் கையெழுத்திட்ட நாடாக, சிறார்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கடமை ஈரான் நாட்டிற்கு உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஈரானில் அண்மையில் இடம்பெற்ற அமைதியற்ற சூழலின் போது சிறைபிடிக்கப்பட்டுள்ள குழந்தைகளை உடனடியாக விடுவிக்குமாறு பிப்ரவரி 20, வெள்ளிக்கிழமையன்று, அழைப்பொன்றை விடுத்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்

சிறார்களைத் தொடர்ந்து தடுத்து வைப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள யுனிசெஃப் நிறுவனம், அவர்களின் நல்வாழ்வை மதிப்பிடுவதற்கு சுயமான அணுகலின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அறிகையொன்றில் கருத்துத் தெரிவித்துள்ள மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிற்கான யுனிசெஃப் மண்டில  இயக்குனர் எட்வார்ட் பெய்க்பெடர் அவர்கள், குழந்தைகளைத் தடுத்து வைப்பதன் குறிப்பிடத்தக்க ஆபத்துக்களை எடுத்துரைத்துள்ளதுடன், சிறைவாசம் அவர்களின் வளர்ச்சியிலும் பரந்த சமூகத்திலும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

"குழந்தைகள் 'வளர்ந்த பெரியவர்கள்' அல்ல; அவர்களுக்கு சிறப்பு கவனிப்பு தேவை," என்று குறிப்பிட்டுள்ள பெய்க்பெடர் அவர்கள், "சுதந்திரம் பறிக்கப்படுவது அவர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்" என்றும், "அவர்கள் மாண்புடனும் மனிதாபிமானத்துடனும் நடத்தப்பட வேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அனைத்துலகச் சட்டத்தின்படி, சிறைபிடிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இடையே வழக்கமான தொடர்பு இருக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டில் கையெழுத்திட்ட நாடாக, சிறார்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கடமை ஈரான் நாட்டிற்கு உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 பிப்ரவரி 2026, 12:46