ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து  மீண்டு வரும் குழந்தைகள்  ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து மீண்டு வரும் குழந்தைகள்   (© Fondazione Avsi)

மாமன் லூமியர் திட்டத்தின் மூலம் ஒளிரும் குழந்தைகளின் எதிர்காலம்

'மாமன் லூமியர்' இத்திட்டத்தின் மூலம், விவசாய விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல், தொழில்முனைவோரை ஊக்குவித்தல், கிராமப்புற மீள்திறனை மேம்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து மறுவாழ்வுக்கு ஆதரவளித்தல் ஆகிய சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் AVSI தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான புருண்டியில் அரசியல் நிலையற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி மற்றும் பிற பகுதிகளில் இருந்து தனித்து இருத்தல் ஆகியவற்றால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஒரு பரவலான சவாலாகத் தொடர்கிறது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள புஜும்புராவில் உள்ள AVSI  திட்ட மேலாளர் ஆண்ட்ரியா ஃபபியானி அவர்கள், " இத்தகைய சூழலை எதிர்கொள்ள அவசரகால உதவி மட்டுமே போதுமானதல்ல; அந்தப் பகுதியில் உள்ள மக்கள் குழுவை உள்ளடக்கிய ஒரு விரிவான வளர்ச்சி அணுகுமுறை அவசியம் என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் அனைத்துலக மீட்புக் குழு(IRC) அனைத்துலக ஒத்துழைப்பிற்கான ஜெர்மன் ஸ்பார்க்ஸன் அறக்கட்டளை (DSIK) மற்றும் BBIN தெற்காசியாவில் உள்ள நான்கு நாடுகளுக்கு இடையேயான ஒரு முக்கியமான மாநிலக் கூட்டமைப்பு (BBIN) உள்ளிட்ட பங்குதாரர்களுடன் இணைந்து புருண்டியில் (Burundi) விவசாயம் மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட இசோகோ இராம என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் ஆண்ட்ரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம், விவசாய விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல், தொழில்முனைவோரை ஊக்குவித்தல், கிராமப்புற மீள்திறனை மேம்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து மறுவாழ்வுக்கு ஆதரவளித்தல்  ஆகிய சமூக மேம்பாட்டுத் திட்டங்களில்  AVSI தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

2024-ஆம் ஆண்டில் என்கோசி (Ngozi) மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குழந்தைகளின் சராசரி ஊட்டச்சத்துக் குறைபாட்டு விகிதம் 9 விழுக்காடாக இருப்பதும், சில கிராமங்களில் இது 66 விழுக்காடு வரை உயர்வாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது என்று AVSI திட்ட மேலாளர் ஃபபியானி  கூறியுள்ளார்.

புஜும்புராவில் AVSI முன்னெடுக்கும் இத்திட்டத்தின் கீழ், 'மாமன் லூமியர்' (Maman Lumière) எனப்படும் தன்னார்வத் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவமனை சிகிச்சைகளையும் பராமரிப்பையும் உறுதி செய்கின்றனர் என்றும், அதேவேளையில், அந்தத் தாய்மார்களுக்கு முறையான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வையும், குழந்தைகளை நோயிலிருந்து மீட்பதற்கான ஆதரவையும் வழங்கி வருகின்றனர் என்றும் திட்ட மேலாளர் ஆண்ட்ரியா ஃபபியானி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தகைய முயற்சிகளால் ஒன்பது மாதங்களில், 12,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் குணமடைந்துள்ளனர் என்றும் அப்பகுதியின் ஊட்டச்சத்துக் குறைபாடு 5 விழுக்காட்டிற்கும் கீழாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 "இசோகோ இராம" என்ற இத்திட்டம் வாழை, தேன் மற்றும் காளான் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, பெண்களின் சேமிப்புக் குழுக்களுக்கும் ஆதரவளித்து உணவுப் பாதுகாப்பு, வருவாய் மற்றும் நீண்ட கால சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் அக்கறை காட்டுவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஏப்ரல் 2026, 15:50