ஈரானியக் குழந்தைகள் ஈரானியக் குழந்தைகள்   (AFP or licensors)

சிறுவர்கள் மீதான வன்முறையின் தாக்கம் குறித்து யுனிசெஃப் கவலை

மோதல் காலம் முழுவதும், யுனிசெஃப் நிறுவனம் ஈரானில் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றியதுடன், ஒத்த எண்ணம் கொண்ட நிறுவனங்களுடன் இணைந்து நலவாழ்வு, மனநலம் மற்றும் உளவியல் ரீதியான ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை சிறுவர்களுக்கும் குடும்பங்களுக்கும் வழங்கி வருகின்றது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஈரானில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு வான்வெளி அமைதிக்குத் திரும்பியிருந்தாலும், சிறுவர்கள் மீதான வன்முறையின் தாக்கம் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் அதை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானில் அண்மையில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ள யுனிசெஃப் நிறுவனம், பெருமளவிலான துயரங்களை அனுபவித்து வந்த ஈரானிய சிறுவர்களுக்கும் குடும்பங்களுக்கும் நம்பிக்கையை அளிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்தப் போர்நிறுத்தம் அமையும் என்று தெரிவித்துள்ளது.

மோதல் காலம் முழுவதும், இந்நிறுவனம் ஈரானில் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றியதுடன், ஒத்த எண்ணம் கொண்ட நிறுவனங்களுடன் இணைந்து நலவாழ்வு, மனநலம் மற்றும் உளவியல் ரீதியான ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை சிறுவர்களுக்கும் குடும்பங்களுக்கும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய போர் நிறுத்த சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை சேவைகள் மீண்டும் கிடைப்பதை உறுதி செய்ய, முன்னரே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மருந்துப் பொருட்கள், நடமாடும் மருத்துவ சேவைகள், ஆரம்ப நலவாழவு மையங்கள் மற்றும் அவசர கால மருத்துவக் கருவிகளை விநியோகித்துள்ள அந்நிறுவனம், சிறுவர்களுக்கும் சமூகங்களுக்கும் தேவையான தடுப்பூசிகளையும் உளவியல் ஆதரவையும் வழங்கி வருகின்றது.

ஈரான் சிறுவர்களும் குடும்பங்களும் இந்த இக்கட்டான சூழலில் இருந்து  மீண்டு வருவதற்கும், மீண்டும் தங்கள் வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் தேவையான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் ஆதரவைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில், நலவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு,  அவசர கால நடவடிக்கை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் தனது தேசிய ஒத்துழைப்புத் திட்டத்தின்படி ஆதரவை விரிவுபடுத்த யுனிசெஃப் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஏப்ரல் 2026, 16:02