2026.05.27 africa

நைஜீரியாவில் தொடரும் கொடூரம்: கத்தோலிக்கப் பங்குகள் மீது ஆயுதப்படையினர் தாக்குதல்!

நைஜீரியாவின் கடுனா (Kaduna) மாநிலம், குர்மின் டங்கானா பகுதியில் உள்ள கத்தோலிக்கப் பங்குச் சமூகங்களை இலக்கு வைத்து கடந்த மூன்று மாதங்களாக நடத்தப்பட்ட தொடர் வன்முறைத் தாக்குதல்களில், குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

நைஜீரியாவின் வட மத்தியப் பகுதியில் உள்ள கடுனா (Kaduna) மாநிலத்தின் குர்மின் டங்கானா (Kurmin Dangana) பகுதியில், கடந்த மூன்று மாதங்களில் கத்தோலிக்கப் பங்கு சமூகங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில், குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 25 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

அருள்பணி. கிறிஸ்டியன் ஒகேவு இம்மானுவேல், இந்த வன்முறைச் சம்பவங்கள் பற்றிய விபரங்களை அபுஜாவிலுள்ள கத்தோலிக்கப் பொதுச் செயலகத்திற்கு கடிதம் வழியாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்கள் அனைத்தும், ககார்கோ (Kagarko) உள்ளாட்சிப் பகுதிக்கு உட்பட்ட 'தூய பேதுரு மற்றும் தூய பவுல்' ஆலயப் பங்கின் பராமரிப்பில் உள்ள கத்தோலிக்கச் சமூகங்களை இலக்கு வைத்தே நடத்தப்பட்டுள்ளன.

கடந்த மே 21 அன்று, கடுமையான இடி மின்னலுடன் கூடிய பெருமழை பெய்து கொண்டிருந்த வேளையில், குர்மின் பொங்கோ பகுதியில் இந்த வன்முறை அரங்கேறியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் கிராமத்திற்குள் ஊடுருவிய ஆயுதப்படையினர் அப்பாவி மக்கள் 5 பேரைக் கொன்று குவித்து, 10 பேரைக் கடத்திச் சென்றனர். எனினும், உள்ளூர் பாதுகாப்புப் படையினரின் துரித முயற்சியால் கடத்தப்பட்டவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முந்தைய தாக்குதல்கள் கடந்த மார்ச் 2 அன்று கசாரு-பி (Kasaru-B) பகுதியிலும், மே 1 அன்று சாபோன் காரி (Sabon Gari) பகுதியிலும் நடத்தப்பட்டுள்ளன. கசாரு-பி கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் காயமடைந்தார், மேலும் எட்டு பேர் கடத்தப்பட்டனர்; கடத்தப்பட்டவர்களில் இருவர் பிணைக்கைதிகளாக இருந்தபோதே பரிதாபமாக உயிரிழந்தனர். சாபோன் காரியில் நடந்த தாக்குதலில் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி காயமடைந்தனர் மற்றும் பத்து பேர் கடத்திச் செல்லப்பட்டனர்; இவர்களில் ஒருவரை கடத்தல்காரர்கள் பின்னர் படுகொலை செய்தனர்.

தொடர்ந்து நீடித்து வரும் இந்த வன்முறையின் காரணமாக, அப்பகுதி மக்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துமாறு திருஅவைத் தலைவர்கள் அரசிற்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, கடந்த உயிர்ப்பு ஞாயிறன்று கச்சியா (Kachia) பகுதியில் கடத்தப்பட்ட கத்தோலிக்க நம்பிக்கையாளர்கள் இன்றும் வன்முறையாளர்களின் பிடியிலேயே தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீதேஸ் செய்தி நிறுவனம் 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மே 2026, 14:52