காசா காசா  (©Gaza)

காசாவில் தீவிரமடையும் கொடிய தொற்றுநோய் அச்சுறுத்தல்!

காசாவில் நாள்தோறும் அரங்கேறும் வன்முறை மற்றும் கடுமையான மருந்துத் தட்டுப்பாட்டிற்கு இடையே, அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைக் கருவிகளை இஸ்ரேலிய அதிகாரிகள் முடக்கியுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

காசாவில் "நாள்தோறும் அரங்கேறும் வன்முறை, தீவிர நோய் அச்சுறுத்தல் மற்றும் மருத்துவத் தட்டுப்பாட்டால் அங்குள்ள மக்கள் தவித்து வரும் வேளையில், அங்கு வர வேண்டிய மருத்துவப் பரிசோதனைக் கருவிகளை இஸ்ரேல் முடக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நலவாழ்வு பணியாளர்கள் ஆபத்தான தொற்றுநோய்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதில் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, நெரிசல், எலி, அனில் போன்ற கொறித்துண்ணிகளின் தொல்லை மற்றும் நீர் மற்றும் நலவாழ்வு அமைப்புகளின் செயல்பட இயலாத நிலை ஆகியவை தொற்றுநோய்களின் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளன.

காசாவின் நலவாழ்வு அமைப்பு மிகுந்த நெருக்கடியில் உள்ளதாகவும் இந்த ஆண்டு நலவாழ்வு மையங்கள்மீது 22 தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், பாதி மருத்துவமனைகள் மட்டுமே ஓரளவு செயல்படுவதாகவும், முழுமையாகச் செயல்படும் மருத்துவமனைகள் எதுவும் இல்லை என்றும் உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலைகள் இருந்தபோதிலும், சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான நோயாளிகளை 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பிவைக்க உலக நலவாழ்வு அமைப்பு உதவியுள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமை, (UNRWA) காசாவிற்குள் மருத்துவ மற்றும் சிறப்பு சிகிச்சைகளை வழங்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, இருப்பினும் இஸ்ரேல் அதன் செயல்பாடுகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் இந்த அமைப்புகள் வழங்கும் சேவைகளைப் பாதித்துள்ளன.

கடந்த ஆண்டு, அந்த முகமை 45 இலட்சம் மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்ளது. ஆனால் மோதல் தொடங்கியதிலிருந்து ஏறத்தாழ 400 பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

"காசா மக்கள் 'இனிமேலும் போரைத் தாங்க மாட்டார்கள்' என்றும், அங்கு மனிதாபிமான நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் ஐநா பாதுகாப்பு மன்றத்தில் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், நிலவி வரும் கடுமையான நிதிப் பற்றாக்குறை அங்கு மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து முடக்கி வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 மே 2026, 14:46