கதைகள் ஆயிரம் கதைகள் ஆயிரம்  

கதைகள் ஆயிரம்

நாம் தினமும் பேசும் வார்த்தைகள்தான் ஆபத்து நேரத்தில் நாவிலிருந்து வெளிவரும். நல்லதை நினைக்கும் இதயம் நம்பிக்கையை தரும்; கெட்டதை பழகிய மனம் அமைதியை இழக்கும்.

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

ஒருமுறை அன்னை மேரி மாதாவும், புனித சூசையப்பரும் விண்ணகத்திலிருந்து மண்ணுலகிற்கு உலா வந்தார்கள். பட்டப்பகலில் உலகப் படைப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டே அவர்கள் நடந்து சென்றனர். அப்போது வழியில் ஒரு மனிதனைக் கண்டார்கள். அவன் ஒரு பெரிய மரக்கிளையின் நுனியில் உட்கார்ந்து கொண்டு, தான் உட்கார்ந்திருந்த அதே கிளையின் அடிப்பாகத்தை படுவேகமாக வெட்டிக் கொண்டிருந்தான். மரத்தின் கீழே ஆழமான பாதாளம் இருந்தது. அதனுள் விழுந்தால் அவனது எலும்பு கூட மிஞ்சாது. அவன் வெட்டிக்கொண்டிருந்த வேகத்தைப் பார்த்தால், இன்னும் சில நிமிடங்களில் அவன் கீழே விழுந்து மடிவது உறுதி போல் தெரிந்தது. அதைக் கண்ட மேரி மாதா பதறிப்போய், "பார்த்தீர்களா இவன் செய்யும் காரியத்தை? இன்னும் சற்று நேரத்தில் கீழே விழுந்து சாகப் போகிறான், இவனைக் காப்பாற்றுங்கள்!" என்றார். அதற்கு சூசையப்பர் கிண்டலாக, "அவன் நிச்சயம் உன்னுடைய பக்தனாகத்தான் இருப்பான். நீயே போய் அவனைக் காப்பாற்று" என்றார். மாதா மறுத்து, "இல்லை, இல்லை! அவன் கழுத்தில் உங்கள் சுரூபத்தைத்தான் போட்டிருக்கிறான். எனவே நீங்கள்தான் போய் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

இறுதியில் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். "சரி, இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் கீழே விழப்போகிறான். அவன் கீழே விழும்போது 'மாதாவே காப் பாற்று !' என்று கத்தினால் நீ போய் காப்பாற்று, 'சூசையப்பரே காப்பாற்று!' என்று கத்தினால் நான் போய் காப்பாற்றுகிறேன்" என்று பேசிக்கொண்டனர். மாதாவும் அதற்குச் சம்மதித்தார்கள் ஆனால், அந்த மரத்தை வெட்டியவனோ எதைப்பற்றியும் கவலைப்படாமல், வெறித்தனமாக வெட்டுவதிலேயே குறியாக இருந்தான். இதோ கடைசி வெட்டும் விழுந்தது! கிளை முறிந்தது! அவன் வெட்டிய வேகத்தில் பாதாளத்தை நோக்கி கீழே விழுந்தான். அப்படிக் கீழே விழுந்து கொண்டிருக்கும்போது அவன் என்ன கத்தினான் தெரியுமா? கடவுளின் பெயரைச் சொல்லி அவசரத்தில்கூடக் கத்தவில்லை. மாறாக, தன் வழக்கமான பேச்சுவழக்கில் கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டே விழுந்தான்!

கடவுள் நமக்குக் கைகொடுக்க எப்போதும் நம் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறார். ஆனால், ஆபத்தான கட்டத்தில் கூட நம் வாயிலிருந்து நல்ல வார்த்தையோ, கடவுளின் பெயரோ வருவதில்லை. நமது அன்றாட வாழ்க்கையில் நாம் என்ன மாதிரியான எண்ணங்களையும் வார்த்தைகளையும் பழகி வைத்திருக்கிறோமோ, அதுதான் நம்முடைய இறுதி நேரத்திலும், ஆபத்துக் காலத்திலும் வெளிப்படும். நாம் செய்யும் தவறுகளால் நாமே ஆபத்தை தேடிக்கொள்ளும்போது, கடவுளைக் கூப்பிடக் கூடத் தோன்றாமல் நம் புத்தியும், நாக்கும் கெட்டுப் போய்விடுகிறது. எனவே கெட்ட வார்த்தைகள் பேசுவதை விடுத்து நல்ல வார்த்தைகளை பேச முயல்வோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 மே 2026, 13:43