நெறி காட்டும் ஆளுமைகள் நெறி காட்டும் ஆளுமைகள் 

நெறி காட்டும் ஆளுமைகள்

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

வாழ்க்கையின் மதிப்பு:

தத்துவஞானி சாக்ரடீஸும், மாமன்னர் அலெக்சாண்டரும் சந்தித்துக்கொண்ட ஒரு தருணம் அது. அப்போது சாக்ரடீஸ் ஒரு கேள்வியைக் கேட்டார்: "மாவீரனே! நீ போரிட்டுப் பிடித்த உனது இந்த ஒட்டுமொத்தப் பேரரசின் மதிப்பு என்ன தெரியுமா?" அலெக்சாண்டர் சற்றுத் தயங்கி, "தெரியவில்லையே... நான் இன்னும் மதிப்பிட்டுப் பார்க்கவில்லை. உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். சாக்ரடீஸ் புன்னகையுடன் "தெரியுமே... உன் ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தின் மதிப்பு வெறும் 20 காசுகள் தான்! என்று சொன்னார்.

மாமன்னர் கோபமடைந்தார். "என்ன சொல்கிறீர்கள்? உலகையே நடுங்கச் செய்யும் எனது சாம்ராஜ்யம் வெறும் 20 காசுகளா? எப்படிச் சொல்கிறீர்கள்?" என்று ஆவேசமாகக் கேட்டார். அதற்கு சாக்ரடீஸ் "கோபப்படாதே மாமன்னா! ஒரு சூழலைக் கற்பனை செய்து பார். நீ ஒரு பெரிய பாலைவனத்தில் வழிதவறி அலைந்து கொண்டிருக்கிறாய். கடுமையான தாகம்... தொண்டை வறண்டு சாவின் விளிம்பில் இருக்கிறாய். அப்போது நான் ஒரு ஒட்டகத்தில் தண்ணீர் குவளையோடு அங்கு வருகிறேன். நீ என்னிடம் தண்ணீர் கேட்டு மன்றாடுகிறாய்." அமைதியாகச் சொன்னார். சாக்ரடீஸ் தொடர்ந்தார், "அப்போது நான், 'உன் சாம்ராஜ்யத்தில் பாதியை எனக்குத் தந்தால் தான் ஒரு குவளை தண்ணீர் தருவேன்' என்று நிபந்தனை விதிக்கிறேன். அந்த மரணப் போராட்டத்திலே நீ என்ன செய்வாய்?" என்று கேட்டார்.

அலெக்சாண்டர் யோசித்துவிட்டு  அத்தகைய சூழலில், என் உயிரைக் காக்கக் கேட்டதை உடனே கொடுத்துவிட்டு, அந்த ஒரு குவளைத் தண்ணீரை வாங்கி என் தாகத்தைத் தணிப்பேன் என்று சொன்னார். சாக்ரடீஸ் இப்போது சவடாலாகச் சொன்னார், "அப்படியானால், மீதிப் பாதி சாம்ராஜ்யத்தையும் கொடுத்து இன்னும் ஒரு குவளைத் தண்ணீரை வாங்கி உயிர் பிழைப்பாய் அல்லவா? ஒரு குவளைத் தண்ணீரின் சந்தை மதிப்பு வெறும் 10 காசு தான். உன் உயிரைக் காக்க நீ கொடுத்தது உனது முழு சாம்ராஜ்யம். இரண்டு குவளைத் தண்ணீருக்கு ஈடானதுதான் உன் ஒட்டுமொத்த சாம்ராஜ்யம் என்றால், அதன் மதிப்பு வெறும் 20 காசுகள் தானே? என்றாராம்.

"மரணம் வரும்போது உலகச் சொத்துக்கள் அனைத்தும் பொருளற்றதாகி விடுகின்றன. இவ்வுலகச் சொத்துக்களை நற்பணிகளாக மாற்றி, அவ்வுலக வாழ்வைச் சொந்தமாக்கிக் கொள்பவரே உண்மையான அறிவுள்ள மனிதர். நீ இறந்த பின்பும் உனது நற்செயல்களால் மக்கள் மனதில் வாழ்வதுதான் உண்மையான சொத்து."

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 மே 2026, 13:28