நபாத்தியாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பின் புகை மூட்டம் எழுந்த காட்சி. நபாத்தியாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பின் புகை மூட்டம் எழுந்த காட்சி. 

லெபனோனில் மீண்டும் தீவிரமடைந்த தாக்குதல்: 3,200 பேர் உயிரிழப்பு!

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் ஏறத்தாழ 3,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 10,000 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனோனின் நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

இஸ்ரேலுக்கும் லெபனோனின் ஹிஸ்புல்லா குழுவிற்கும் இடையே ஏப்ரல் 16, வியாழனன்று  போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், லெபனோனில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 40 பேர் காயமடைந்துள்ளனர். மனிதாபிமானத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் லெபனோன் அதிகமான அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது.

ஹிஸ்புல்லாவின் உள்கட்டமை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் கூறினாலும், இந்தத் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான வீடுகளும் கிராமங்களும் அழிந்துள்ளன, இதனால் ஏறத்தாழ பத்து லட்சம் மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று லெபனோன் தரப்பு கூறுகின்றனர்.

தாக்குதல்களால் இடம்பெயர்ந்த 1,40,000-க்கும் மேற்பட்ட மக்கள் இப்போது அரசுப் பள்ளிகளில் தஞ்சம் புகுந்துள்ள அதே வேளையில் ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களிலும் உள்ளூர் மக்களுடனும் வசித்து வருகின்றனர். மீண்டும் தொடங்கப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் ஏறத்தாழ 3,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 10,000 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனோனின் நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு தங்களின் 10 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் ஆறு பேர் ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வரும் இந்த மோதல், நலவாழ்வு, உணவுப் பாதுகாப்பு, இடம்பெயர்வு மற்றும் உள்ளூர் சமூகங்களின் தாங்கும் திறன் ஆகியவற்றில் தீவிரமான மற்றும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 மே 2026, 12:09