சூடானின் ஒரு பகுதியில் உலக உணவுத் திட்டத்தின் (WFP) உணவு உதவி வழங்கப்பட்டபோது. சூடானின் ஒரு பகுதியில் உலக உணவுத் திட்டத்தின் (WFP) உணவு உதவி வழங்கப்பட்டபோது. 

உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் சூடான் மக்கள்!

சூடானில் 2026 ஆம் ஆண்டில், ஐந்து வயதிற்குட்பட்ட ஏறத்தாழ 825,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய ஆண்டுகளை விட கடுமையான உயர்வாகும்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

சூடான் நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 40 விழுக்காட்டினர் (ஐந்தில் இரண்டு பேர்) கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் தவித்து வருவதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, உலக உணவுத் திட்டம் மற்றும் யுனிசெஃப் ஆகிய அனைத்துலக அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

தார்பூர் மற்றும் தெற்கு கோர்டோபான் ஆகிய பதற்றம் நிறைந்த பகுதிகளில், ஏறத்தாழ 1,35,000 மக்கள் ஏற்கனவே  வறுமையிலும் பசியிலும் வாடி வருவதாகவும், வரும் மாதங்களில் அங்கு பஞ்சம் ஏற்படும் பெரும் ஆபத்து  உள்ளதாகவும்  கவலை தெரிவித்துள்ள அந்த அமைப்புகள், ஐம்பது இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவு பற்றாக்குறை மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியான உதவி தேவைப்படும் சூழலில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளன.

கடந்த நான்கு ஆண்டு உள்நாட்டு மோதலால் 90 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, உணவு உற்பத்தி மற்றும் சந்தைகளும் அழிந்துள்ளன என்று தெரிவித்துள்ள அவ்வமைப்புக்கள், மேலும், 40 விழுக்காடு நலவாழ்வு மையங்கள் முடங்கியுள்ளதால், இலட்சக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் துப்புரவு வசதிகளின்றித் தவித்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சூடானின் 2026 ஆம் ஆண்டு உதவித் திட்டத்தில் 20 விழுக்காடு நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும், இதனால் இலட்சக்கணக்கான மக்கள் அடிப்படை உதவிகள் கிடைக்காமல் தவிக்கின்றனர் என்றும் அவ்வமைப்புக்கள் எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த அசாதாரண சூழலினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளே முதலிடம் பெறுகின்றனர். 2026 ஆம் ஆண்டில், ஐந்து வயதிற்குட்பட்ட ஏறத்தாழ 825,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 மே 2026, 13:58