எபோலா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கும் குழந்தைகள் நலன்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
உலக நலவாழ்வு அமைப்பு (WHO), தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் பாதிப்பை அனைத்துலக பொது நலவாழ்வு அவசரநிலையாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு குறித்து யுனிசெஃப் தனது ஆழந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
மே 18-ஆம் தேதி நிலவரப்படியான பாதிப்பு புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கிழக்கு காங்கோவின் இத்துரி மாநிலத்தில் இந்த நோய் தொற்றால் 246 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், 80 பேர் மரணமடைந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதேபோல், அண்டை நாடான உகாண்டாவிலும் எபோலா தொற்று ஊடுருவியுள்ளது. அங்கு இருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டு, அதில் ஒருவர் மரணமடைந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளனர். எல்லைப் பகுதிகளில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நோய் பரவல் கடுமையான இரத்தக்கசிவு மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் எபோலாவின் பண்டிபுஜியோ (Bundibugyo) வகையைச் சேர்ந்தது என்றும், இதற்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சை முறையோ இல்லை என்றும் தெரிவித்துள்ள நல வாழ்வு அதிகாரிகள், இந்த பரவல் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கியிருக்கலாம் என்று நம்புகின்றனர்.
பாதுகாப்பற்ற சூழல் மற்றும் மக்களின் இடப்பெயர்வு காரணமாக எபோலா பரவும் அச்சமும், அதனால் குழந்தைகள் பாதிக்கப்படும் ஆபத்தும் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள யுனிசெஃப் நிறுவனம், இதனால் குழந்தைகள் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் மனநல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இதனை எதிர்கொள்ள 50 டன் அவசரக்கால நிவாரணப் பொருட்களை யுனிசெஃப் நிறுவனம் அனுப்பியுள்ளது என்றும் இவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2000-க்கும் மேற்பட்ட சமூகப் பணியாளர்கள் களத்தில் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை காக்க யுனிசெஃப் அவசரக்கால நடவடிக்கை நிலையையும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்