ஆன்றோர் வாக்கு
மேதகு ஆயர் சிங்கராயன்
வாழ்வோருக்கே அன்பு மிகவும் தேவை
அன்பிற்குரியவர்களே, இன்று நம் வாழ்வை மாற்றக்கூடிய ஒரு சிந்தனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அர்னால்டு ஜார்ஜ் கூறியுள்ள ஒரு பொன்மொழி இதுதான்:
"The living need charity more than the dead."
"இறந்தோரை விட வாழ்வோருக்கே அன்பும் உதவியும் மிகவும் தேவை."
இந்த வார்த்தைகள் நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன. ஒரு ஊரில் வயதான ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய பிள்ளைகள் அனைவரும் வேறு ஊர்களில் இருந்ததால், வாழ்க்கையின் கடைசி சில ஆண்டுகளை அவர் தனிமையில் கழித்தார். யாருடைய அன்பும் அரவணைப்பும் இல்லாமல் எப்படியோ வாழ்ந்து வந்த அவர் இறுதியில் மரணமடைந்தார். அவர் இறந்த செய்தியைக் கேட்டவுடன், உறவினர்களும் நண்பர்களும் அனைவரும் வந்தனர். அவரது இறுதி ஊர்வலத்தில் மலர்கள், உணவுப் பொருட்கள், துணிமணிகள் என பலவற்றை எடுத்துச் சென்றனர். அதைப் பார்த்தபோது ஒரு கேள்வி மனதில் எழுந்தது. இந்த அன்பில் பாதியையாவது அவர் உயிரோடு இருந்தபோது காட்டியிருந்தால்? அந்த உணவையும் உதவியையும் அவர் வாழ்ந்தபோது கொடுத்திருந்தால், இன்னும் சில நாட்களோ, மாதங்களோ, ஆண்டுகளோ மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாமே! நாம் பல நேரங்களில் ஒருவர் இறந்த பிறகுதான் அவரைப் பற்றி புகழ்ந்து பேசுகிறோம்; அவருக்காக மலர்களையும் அஞ்சலிகளையும் செலுத்துகிறோம். ஆனால், அவர் உயிரோடு இருக்கும்போது அவருக்குத் தேவையானது நம் அன்பு, நம் நேரம், நம் அக்கறை, நம் உதவிதான். எனவே, அன்பை நாளைக்கு ஒத்திவைக்காதீர்கள். இன்று சொல்ல வேண்டிய நல்ல வார்த்தையை இன்று சொல்லுங்கள். இன்று செய்ய வேண்டிய உதவியை இன்று செய்யுங்கள். உயிரோடு இருப்பவர்களின் மனதை மகிழ்விப்பதே உண்மையான அன்பு.
வாழ்வோருக்கு அன்பு காட்டுவோம்; தனிமையில் இருப்பவர்களைத் தேடிச் செல்வோம்; நம்மால் முடிந்த உதவியை அவர்கள் உயிரோடு இருக்கும்போதே செய்வோம். அதுவே இறைவனுக்குப் பிரியமான அன்பின் செயலாகும்.
நாம் பிறரின் வாழ்வில் ஒளியாக மாற முயற்சி செய்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.