காசா காசா 

காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் ஆயுத உற்பத்தி மையத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில், காசா மற்றும் இஸ்ரேல்–லெபனான் எல்லைப் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் உரோமில் இருநாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

இஸ்ரேல் காசா பகுதி முழுவதும்  தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில் ஞாயிற்றுக்கிழமையன்று குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரின் சப்ரா சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுத உற்பத்தித் தளத்தை இலக்கு வைத்துத் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதிலும் இந்தத் தளம் இயங்கி வந்ததாகவும், ஹமாஸின் இராணுவத் திறன்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இது பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நுஸைரத் முகாமில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களை இஸ்ரேலிய இராணுவம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதற்கிடையில், இஸ்ரேல்-லெபனோன் எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கான தூதரக முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஜூலை 14-15 தேதிகளில் உரோமில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் மற்றும் லெபனோன் தூதுக்குழுக்கள் உரோம் நகரை வந்தடைந்துள்ளன. தெற்கு லெபனோனில் இரண்டு முன்னோடி சோதனை‌ மண்டலங்களை (pilot zones) உருவாக்குவது குறித்து இந்த விவாதங்களில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லெபனோனில் இருந்து ஹெஸ்பொல்லா அமைப்பு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கி, லெபனோன் ஆயுதப் படைகள் கட்டுப்பாட்டை ஏற்க இந்த மண்டலங்கள் வழிவகை செய்யும்.

இந்த சூழலில் அரசியல் வட்டாரங்களின் கவனமானது அக்டோபர் 27 அன்று இடம்பெறவிருக்கும் இஸ்ரேலின் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கியும் திரும்பியுள்ளது. தேர்தல் பரப்புரையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் வகையில், இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட் (Knesset) கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதோடு, ஒரு பரந்த தேசிய அரசிற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தீவிர வலதுசாரி கட்சிகளைத் தவிர்த்த ஒரு கூட்டணியையே டிரம்ப் நிர்வாகம் விரும்பக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, இதனால் இந்தத் தேர்தல் இஸ்ரேலின் அரசியல் எதிர்காலத்தில் ஒரு முக்கிய தருணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

14 ஜூலை 2026, 12:56