உரோமையின் கப்பித்தோலின் சதுக்கம் உரோமையின் கப்பித்தோலின் சதுக்கம்  (Copyright © Nicola Forenza)

செயற்கை நுண்ணறிவு, அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக ‘உரோம் பிரகடனம்’ கையெழுத்து!

செயற்கை நுண்ணறிவு, அணு ஆயுதங்கள் மற்றும் தன்னாட்சி ஆயுதங்களால் உருவாகும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, 200-க்கும் மேற்பட்ட நோபல் பரிசு பெற்றவர்கள், அறிவியலாளர்கள் மற்றும் உலகத் தலைவர்கள், ஜூலை 16 அன்று “ஆயுதமற்ற மற்றும் ஆயுதக் குறைப்பை நோக்கிய அமைதிக்கான உரோம் பிரகடனம்” என்ற ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

செயற்கை நுண்ணறிவு, அணு ஆயுதங்கள் மற்றும் தன்னாட்சி ஆயுதத் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில், 200-க்கும் மேற்பட்ட நோபல் பரிசு பெற்றவர்கள், அறிவியலாளர்கள், அனைத்துலக நிபுணர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் முன்னாள் அரசுத் தலைவர்கள், ஜூலை 16 அன்று உரோம் நகரின் கப்பித்தோலின் குன்றில், “ஆயுதமற்ற மற்றும் ஆயுதக் குறைப்பை நோக்கிய அமைதிக்கான உரோம் பிரகடனம்” என்ற ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் ‘மகத்தான மானுடம் (Magnifica Humanitas) என்ற திருத்தூது மடலை மையமாகக் கொண்டு, ஜூலை 14 முதல் 16 வரை காஸ்தல் கந்தோல்போவில் உள்ள போர்கோ லவுதாத்தோ சி வளாகத்தில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் அணுப் போர் குறித்த உலக நோபல் பரிசு பெற்றோர் பேரவை, இப்பிரகடனத்துடன் நிறைவடைந்தது.

உரோமை மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர் கர்தினால் பால்டோ ரெய்னா அவர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பல நன்மைகளை அளித்தாலும், அறநெறி இல்லாத தொழில்நுட்பம் அழிவுக்கான கருவியாக மாறக்கூடும் என்று எச்சரித்தார்.

உயிர் மற்றும் மரணம் தொடர்பான முடிவுகள் மனிதர்களின் பொறுப்பான கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும்; அவற்றை இயந்திரங்களோ, செயற்கை நுண்ணறிவு அமைப்புகளோ தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

வாழ்வுக்கான திருப்பீடக் கழகத்தின் வேந்தர் அருள்பணி அந்த்ரேயா சியுச்சி அவர்கள், மனிதர்களின் தேர்வுகளைப் பொறுத்து செயற்கை நுண்ணறிவு ஆக்கத்திற்கும் அழிவிற்கும் பயன்படுத்தப்படலாம் என்று கூறினார்.

நோபல் அமைதிப் பரிசு பெற்ற மரியா ரெஸ்ஸா மற்றும் கர்தினால் சில்வானோ மரியா தோமாசி ஆகியோரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வலுவான அறநெறி வழிகாட்டுதல் அவசியம் என்று வலியுறுத்தினர்.

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டேவிட் கிராஸ், உலகம் மீண்டும் அணு ஆயுதப் போட்டியை நோக்கி நகர்ந்து வருவதாக எச்சரித்து, அணு ஆயுத நாடுகள் போர் ஆபத்தை குறைக்கும் கொள்கைகளை ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நடிகையும் அமைதித் தூதருமான ஷெரோன் ஸ்டோன், “மனித மாண்பு என்பது ஒரு அல்காரிதம் அல்ல” என்ற வார்த்தைகளுடன் மனித மையமான தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அழைப்பை விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

17 ஜூலை 2026, 13:17