US-HEALTH-VIRUS-EDUCATION

உக்ரைன் குழந்தைகளைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை தேவை: 'சேவ் த சில்ட்ரன்' அமைப்பு வேண்டுகோள்!

உக்ரைனில் குழந்தைகளின் உயிரிழப்புகளும் காயங்களும் 2022ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ள நிலையில், 'சேவ் த சில்ட்ரன்' அமைப்பு உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

உக்ரைனில் குழந்தைகளின் உயிரிழப்புகளும் காயங்களும் 2022ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையைத் தொடர்ந்து, 'சேவ் த சில்ட்ரன்' (Save the Children) அமைப்பு உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உக்ரைனுக்கான 'சேவ் த சில்ட்ரன்' அமைப்பின் இயக்குநர் சோனியா குஷ் அவர்கள், "உக்ரைன் குழந்தைகளின் துயரத்தை உலகம் புறக்கணிக்கக் கூடாது என்றும், அவர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு எதிரான இந்தக் கடுமையான மீறல்களை முடிவுக்குக் கொண்டுவரவும் அவசர நடவடிக்கை தேவை என்றும்  தெரிவித்துள்ளார்.

ஐ.நா. வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிவரங்களின்படி, 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் 123 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 குழந்தைகள் உயிரிழந்ததுடன், 116 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். வீடுகள், பள்ளிகள் மற்றும் பொதுஇடங்கள்கூட குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடங்களாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2014ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் பணியாற்றி வரும் 'சேவ் த சில்ட்ரன்' அமைப்பு, 2022ஆம் ஆண்டு முழுமையான போர் தொடங்கியதிலிருந்து தனது மனிதாபிமானப் பணிகளை விரிவுபடுத்தியுள்ளது. இதுவரை 47 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு, அதில் 19 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவியளித்துள்ள இவ்வமைப்பு, 4 இலட்சத்து 48 ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி உதவியையும் வழங்கியுள்ளது.

தாக்குதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, முன்கணிக்க முடியாத வகையில் நடைபெற்று வருவதாக  எச்சரித்துள்ள சோனியா குஷ் அவர்கள், அதிக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் முழு அடுக்குமாடிக் கட்டடங்களையே தகர்த்து, பாதுகாப்பான இடங்களாகக் கருதப்பட்ட நிலத்தடி தங்குமிடங்களையும் தாக்குவதால், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் பாதுகாப்பு பெறும் இடமே இல்லாத நிலை உருவாகியுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

16 ஜூலை 2026, 12:49