வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,490 ஆக உயர்வு
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
வெனிசுலாவில் கடந்த ஜூன் 24 அன்று ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,490 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசின் அண்மைய அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின் படி, 16,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், மேலும் ஏறத்தாழ 18,000 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
ஏறத்தாழ 6,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், இடிபாடுகளுக்கு இடையே குடும்பத்தினர் தங்கள் உறவுகளைத் தொடர்ந்து தேடி வருவதால் இன்னும் பலர் காணாமல் போனவர்களாகவே அறியப்படுகின்றனர். இந்தப் பேரழிவு ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், நெஞ்சை உலுக்கும் கதைகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியான லா குவைராவில், ஒரு பதின்ம வயது சிறுமி இடிபாடுகளுக்கு அடியில் கிட்டத்தட்ட 24 மணி நேரம் உயிர் பிழைத்திருந்தார். ஆனால், தனித்துவமான மீட்புக் கருவிகள் சரியான நேரத்தில் வந்து சேராததால், மீட்புக் குழுவினர் அவரைச் சென்றடைவதற்கு முன்பே அவர் உயிரிழந்துள்ளார். அவருடன் சேர்ந்து பட்டமளிப்பு விழாவிற்கான நடனப் பயிற்சி செய்து கொண்டிருந்த அவரது தோழி மரியா, 17 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்
ஒன்றாகப் பயிற்சி செய்து கொண்டிருந்த பத்து நண்பர்களில், ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனைத்துலக மீட்புக் குழுவினர் தங்களது அவசரக்கால மீட்புப் பணிகளை முடித்துக்கொண்டு தற்போது தங்கள் நாடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இடிபாடுகளுக்கு அடியில் மனிதர்கள் உயிருடன் சிக்கியிருப்பதை அறிந்திருந்தும், அனைவரையும் காப்பாற்ற முடியாமல் போன துயரமான தருணத்தை இங்கிலாந்து நாட்டு தீயணைப்பு வீரர்கள் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
அதே வேளையில், தங்கள் வீடுகளையும் அன்புக்குரியவர்களையும் இழந்த நிலையிலும், தங்களிடம் இருந்த உணவு மற்றும் தண்ணீரை மீட்புக் குழுவினருடன்
பகிர்ந்து கொண்ட வெனிசுலா மக்களின் அசாதாரணமான தாராள மனப்பான்மையையும் அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
அடுத்த ஆறு மாதங்களில் பாதிக்கப்பட்ட 13 இலட்சம் மக்களுக்கு உதவுவதற்காக 300 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அவை அனைத்துலக சமூகத்திற்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலநடுக்கங்களால் ஏறத்தாழ 6.7 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பீதேஸ் செய்தி நிறுவனம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.