நெறிகாட்டும் ஆளுமைகள் நெறிகாட்டும் ஆளுமைகள்  

நெறிகாட்டும் ஆளுமைகள்

தோல்வி என்பது முடிவல்ல; அது வெற்றிக்கான புதிய பாடம். தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டு, தொடர்ந்து முயன்றால் வெற்றி நிச்சயம்.

தோல்விகளிலிருந்து பிறக்கும் வெற்றி

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தார். மின்சாரக் கம்பிகளுக்கு இடையே ஒளிரும் இழையை உருவாக்குவதற்காக ஏறக்குறைய 2,000 வகையான பொருட்களை பயன்படுத்திப் பார்த்தார். ஆனால், அவற்றில் எதுவும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. ஒருநாள், அந்தப் பொருட்கள் அனைத்தையும் பார்த்த அவரது உதவியாளர்,
“ஐயா, நமது கண்டுபிடிப்புக்கு இந்த 2,000 பொருட்களும் பயன்படாமல் போய்விட்டதே!” என்று கூறினார். அதற்கு எடிசன், “இல்லை, அப்படி சொல்லாதீர்கள். இந்த 2,000 பொருட்களும் மின்சார விளக்கின் ஒளிரும் இழையாகப் பயன்படாது என்பதை நாம் கண்டுபிடித்திருக்கிறோம். அதுவே ஒரு பெரிய கண்டுபிடிப்புதானே! மேலும், இந்தப் பொருட்கள் வேறு எதற்காவது பயன்படலாம். அதையும் நாம் கண்டுபிடிப்போம்” என்று கூறினார்.

எடிசனின் இந்த எண்ணம் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத்தருகிறது. தோல்வி என்பது முடிவல்ல; அது நமக்கு ஒரு புதிய பாடத்தைக் கற்றுத்தரும் அனுபவம். கடவுளின் படைப்பில் “பயனற்றது” என்று எதுவும் இல்லை. நமது வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு தோல்வியும், அடுத்த வெற்றிக்கான படிக்கல்லாக அமையலாம். வெற்றி என்பது பெற்றுக்கொள்வது; தோல்வி என்பது கற்றுக்கொள்வது. தோல்விகளின் கூட்டுத்தொகையே வெற்றி. எனவே, தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல், அவற்றிலிருந்து பாடம் கற்று தொடர்ந்து முயற்சி செய்வோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

25 ஆகஸ்ட் 2026, 15:15