தேடுதல்

காணாமற்போன மகன் உவமை காணாமற்போன மகன் உவமை  

தவக்காலம் - நான்காம் ஞாயிறு: இறைத்தந்தையின் இரக்கம்நிறை அன்பு

இறைத்தந்தையைப் போல மன்னிக்கும் மனமும், இளைய மகனைப்போல மன்னிப்பு வேண்டும் மனமும் பெறுவோம்.
தவக்காலம்-4ம் ஞாயிறு இறைத்தந்தையின் இரக்கம்நிறை அன்பு

செல்வராஜ் சூசைமாணிக்கம்  : வத்திக்கான்

(வாசகங்கள் I. யோசு 5: 9அ,10-12 II. 2 கொரி 5: 17-21   III. லூக்  15: 1-3, 11-32)

தவக்காலத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமைக்குள் அடியெடுத்து வைக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இறைத்தந்தையின் இரக்கம்நிறை அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றன. மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளையும் ‘ஒத்தமை நற்செய்திகள்’ என்று நாம் அழைக்கின்றோம். காரணம், ஒத்த கருத்தை இம்மூவரும் தங்கள் நற்செய்திகளில் வெளிப்படுத்தியிருப்பர். எடுத்துக்காட்டாக, ‘விதைப்பவர் உவமை’ என்பது மூன்று நற்செய்திகளிலும் வருகின்றது. இப்படி பல எடுத்துக்காட்டுகளை நாம் கூற முடியும். அதேவேளையில், இம்மூவருமே சிலவற்றை தங்கள் நற்செய்தியில் மட்டும் சிறப்பாகப் பதிவு செய்திருப்பார்கள். அப்படிப் பார்க்கின்றபோது, இந்தக் காணாமற்போன மகன் உவமை லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

லூக்கா நற்செய்தி ‘இரக்கத்தின் நற்செய்தி’ என்று அழைக்கப்படுகிறது. ‘இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்தார்’ என்னும் கருத்து இந்நற்செய்தியின் முதன்மைச் செய்தியாக விளங்குகிறது (19:10). இந்நற்செய்தியில், இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாவிகள், நோயாளிகள், பெண்கள், ஏழைகள், சமாரியர் ஆகியோர் சிறப்பிடம் பெறுகின்றனர். தூய ஆவியின் செயல்பாடு, இயேசுவின் இரக்கம், திருப்பணி, மனமாற்றம், பாவ மன்னிப்பு, இவற்றால் ஏற்படும் மகிழ்ச்சி ஆகியவை இந்நற்செய்தியில் அதிகம் வலியுறுத்தப் பெறுகின்றன. குறிப்பாக, இறைத்தந்தையின் இரக்கம்நிறை அன்பு இந்நற்செய்தி முழுவதுமே இழையோடுவதை நம்மால் காண முடிகிறது. அதனால்தான், “உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.” (மத் 5:48) என்று மத்தேயு கூறினாலும், "உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்" (6:36) என்று கூறுகின்றார் லூக்கா. இதன் பின்னணியில் இன்றைய நம் இறைவார்த்தைச் சிந்தனைகளைத் தொடங்குவோம்.

லூக்கா நற்செய்தியில் மட்டுமே வரும் காணாமற்போன மகன் உவமை ஒரு பிரசித்திப்பெற்ற உவமை. இன்றும் எல்லா மத மக்களாலும் விரும்பப்படுகின்ற ஒரு அழகான உவமை. நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, இந்த உவமையானது தமிழ் செய்யுள் பகுதியில் இடம்பெற்றிருந்தது. தன் மகன்மீது உண்மையான அன்பு கொண்டிருக்கும் ஒரு தந்தையின் இரக்கம்நிறை அன்பை விவரிக்கும் இதுபோன்றதொரு உவமையை நாம் எங்குமே கண்டிருக்க முடியாது, இனி காணவும் முடியாது. இயேசு கூறும் இந்த உவமை,  ஒரு தந்தை தன் மகனை இந்தளவுக்கு ஆழமாக அன்பு செய்ய முடியுமா என்றும், அவர் இத்தனைபெரிய நல்லவராக இருக்க முடியுமா என்றும் நம்மை மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது.

இந்த உவமைக்குள் நாம் செல்வதற்கு முன்பு, யாரை முன்னிறுத்தி இயேசு இந்த உவமையைக் கூறுகிறார் என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். காணாமற்போன ஆடு, காணாமற்போன திராக்மா, காணாமற்போன மகன் ஆகிய மூன்று உவமைகளை இயேசு அடுத்தடுத்துக் கூறுவதாக இந்நற்செய்தியின் 15ம் பிரிவில் லூக்கா பதிவு செய்கின்றார்.  இந்த மூன்று உவமைகளையும் இயேசு பரிசேயரையும், மறைநூல் அறிஞரையும் மையப்படுத்தியே கூறுகின்றார் என்பதையும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். காரணம், இவ்வதிகாரத்தின் தொடக்கமே இதைத்தான் வெளிப்படுத்துகிறது, வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார் (15:1-3). இந்த மறையுரையின் தொடக்கத்தில் நாம் கேட்டதுபோல, யூதச் சமுதாயத்தில் பரிசேயராலும், மறைநூல் அறிஞர்களாலும் இகழ்ந்து ஒதுக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பிடம் கொடுக்கும் வகையில் மிகமுக்கியமாக இந்த மூன்று உவமைகளையும் இயேசு எடுத்துக் கூறுகின்றார். நீங்கள் உங்களையே மிகவும் மேலானவர்களாக நினைத்துக்கொண்டு மற்றவர்களை வெறுத்து ஒதுக்குகிறீர்கள். ஆனால், இவர்களைத்தான் இறைத்தந்தை தன் அன்பு மகனாகவும் மகளாகவும் ஏற்றுக்கொள்கிறார் என்பதை அவர்களுக்கு வெட்டவெளிச்சமாக்குகின்றார். இப்போது, காணாமற்போன மகன் குறித்த உவமையைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம். இயேசு கூறும் இந்த உவமை மூன்று முக்கிய கருத்துக்களை உள்ளடக்கியிருக்கிறது. அவைகள் முறையே:  மனம் வருந்துதல், திரும்பி வருதல், மற்றும், விருந்தில் பங்குபெறுதல்.

முதலாவதாக, தன் பாவத்திற்காக மனம் வருந்துதல்: நம் பாவங்களுக்காக மன்னிப்புப் பெறுவதற்கான முதல்நிலை இதுதான். ஏனென்றால், வருந்தாத மனம் திருந்தாது என்பார்கள். அவர் அறிவு தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! (15:17) என்று கூறும் இளைய மகனின் வார்த்தைகள், அவர் தன் பாவத்திற்காக மனம் வருந்துவதைக் காட்டுகின்றன. சக்கேயுவின் மனமாற்றத்திலும் இதைத்தான் நாம் பார்க்கின்றோம். சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று இயேசுவிடம் கூறுகிறார் (19:8). பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமையில், வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’” (18:13). என்று கூறித் தன் பாவத்திற்காக மனம் வருந்துகிறார்.

இரண்டாவதாக, தந்தையிடம் திரும்புதல்: ‘திருந்தி வா, திரும்பி வா’ என்று கூறுவார்கள். முதல் படியிலேயே நாம் நின்றுபோய்விடக்கூடாது. ‘நான் மாபெரும் தவறிழைத்துவிட்டேன்’, ‘நான் அப்படியெல்லாம் செய்திருக்கவே கூடாது’, ‘அறிவற்ற தனமாக நான் நடந்துவிட்டேன்’, ‘இனி என் வாழ்க்கையில் என்ன பெரிதாக நடந்துவிடப் போகிறது, எப்படியோ வாழ்க்கையை நடத்த வேண்டியதுதான்’, ‘நான் செய்த பாவத்திற்கான தண்டனைதான் இது” என்றெல்லாம் கூறி நம் மனமாற்றத்தின் உண்மைத்தன்மையை இழந்துவிடக்கூடாது. அதாவது, நமது மனமாற்றம் நம்மை நம்பிக்கையற்ற நிலைக்குள் தள்ளிவிடக்கூடாது. மாறாக, அது நம்மை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்.

“இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்கிறார் ஆண்டவர் (யோவேல் 2:12). "இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய். இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: “தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்; நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்" (ஒசே 14:1-2) ‘என்னிடம் திரும்பி வாருங்கள்,’ என்கிறார் படைகளின் ஆண்டவர். (செக் 1:2). நீர் எல்லாம் வல்லவரிடம் திரும்பி வருவீராகில், நீர் கட்டியெழுப்பப்படுவீர் (யோபு 22:23). மேற்கண்ட இறைவார்த்தைகள் இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாவங்களுக்காக மனம்வருந்திக்கொண்டு ஆண்டவராகிய கடவுளிடம் திரும்பி வரவேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன.

‘திரும்பி வருதல்’ என்பது எதோ ‘கடமைக்காக வருதல்’ என்று அர்த்தம் அல்ல. மாறாக, இறைத்தந்தையின் ஆழமான அன்பையும் அவருடைய நன்மைத்தனங்களையும் உணர்ந்து வருதல் என்று பொருள்கொள்ள வேண்டும். இத்தகைய நிலைதான் மீண்டும் நம்மை பாவத்தில் விழாமல் காப்பாற்றும். காணாமற்போன மகன் உவமையில், தனது தந்தையின் கனிந்த அன்பையும், இரக்கம் நிறைந்த செயல்களையும் ஆழ்ந்துணர்ந்தவராக, தன் தந்தையிடம் திரும்பி வருகிறார் இளைய மகன். தன் தந்தையை மீண்டும் சந்திக்கும்போது அவரிடத்தில் என்ன சொல்லி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றெல்லாம் தன்னைத் தயார்படுத்திக்கொள்வதையும் பார்க்கின்றோம். "நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்" என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். (வசனம் 18-20).

மூன்றாவதாக, மன்னிப்பின் கொண்டாட்டம்: மன்னிப்பின் அடையாளமாக அமைவது கொண்டாட்டம். எந்தவொரு மனம்திரும்புதலும் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் அடிப்டையாகக் கொண்டதாய் இருக்கவேண்டும். காணாமற்போன மகன் உவமையில் இந்த இரண்டு விடயங்களையும் காண்கின்றோம். தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில், என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார் (வசனம் 22-24).

இன்றும் கிராமங்களில் இத்தகைய நடைமுறைகள் காணப்படுகின்றன. அதாவது, உறவுகளுக்குள் ஏற்படும் சண்டைகள், பிரிவுகள், பிணக்குகள் ஆகியவை தீர்த்துவைக்கப்படும்போது அவைகள் விருந்து கொண்டாட்டங்களுடன் நிறைவடைகின்றன. நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்று இப்போது என் நினைவுக்கு வருகிறது. நம் தமிழகத்தில் அன்னையின் பெயர்கொண்ட திருத்தலம் ஒன்றில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அத்திருமணத்திற்கு நானும் சென்றிருந்தேன். திருமணம் முடிந்து சாப்பிடப்போகும் நேரத்தில் அங்கே திடீரென்று ஒரு சண்டை வந்துவிட்டது. அச்சண்டையை விலக்கிவிட வந்த அவ்வூர்காரர் ஒருவரை, மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த ஒருவர் தவறுதலாக அடித்துவிட்டார். இது பெரும் பிரச்சனையாக முற்றிவிட்டது. ‘எங்கள் ஊர்காரரை அடித்தவரை நாங்கள் திரும்ப அடிக்காமல் விடவேமாட்டோம்’ என்று அவ்வூரைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு வந்துவிட்டார்கள். ‘இது தெரியாமல் நடந்துவிட்டது. அவர் சார்பாக நாங்கள் மன்னிப்புக் கேட்கிறோம்’ என்று மாப்பிள்ளை வீட்டார் இறங்கிவந்து மன்னிப்புக் கேட்டபோதும் அவ்வூர்காரர் கேட்பதாக இல்லை. ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தப் பேச்சு வார்த்தையில் ஒருவழியாக அவ்வூரைச் சேர்ந்தவர்கள் சமாதானம் ஆனார்கள். அப்போது அவ்வூரைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், “சரிப்பா ஒரு வழியா சமாதானமாகி நாம ஒருத்தர ஒருத்தர் மன்னிச்சு ஏத்துக்கிட்டோம், அதற்கு அடையாளமாக வாங்க கடைக்குப் போயி ஒண்ணா டிபன் சாப்பிட்டுட்டுப் போவோம் என்று கூறி எல்லாரையும் கடைக்கு அழைத்துச் சென்றார். அவ்வாறு சென்று சாப்பிடும்போதே ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கிக் கொண்டார்கள். உளமகிழ்ந்து உள்ளன்போடு உறவாடினார்கள். விருந்துக் கொண்டாட்டங்கள் பகைமையை மறக்கும் மருந்தாகச் செயல்படுகின்றன. என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் மகிழ்ச்சிநிறை பெருவாழ்வை நமக்களிக்கின்றன.

ஆகேவ, நம் இறைத்தந்தையைப் போன்று நாமும் இரக்கம்நிறை மனதுடன் பிறரை நிபந்தனையின்றி மன்னித்து ஏற்றுக்கொள்வோம். மன்னிப்புக் கேட்கத் தெரிந்தவர் மனம் திருந்தி வாழ்வார், மன்னிப்புக் கொடுக்கத் தெரிந்தவர் மனம் மகிழ்ந்து வாழ்வார். மன்னிப்புக் கேட்பதற்கும் மன்னிப்புக் கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால் வாழ்க்கை நமக்கு மிகவும் எளிதாகிவிடும். ஆகவே, இறைத்தந்தையைப் போல மன்னிக்கும் மனமும், இளைய மகனைப்போல மன்னிப்பு வேண்டும் மனமும் பெறுவோம். அதற்கான அருளை ஆண்டவர் இயேசு நமக்கு அருளவேண்டும் என்று இந்நாளில் ஒன்றிணைந்து மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 March 2022, 15:16