தேடுதல்

பாபேல் கோபுரம் பாபேல் கோபுரம் 

தடம் தந்த தகைமை – குழப்பத்தை விளைவித்த பாபேல் கோபுரம்

மனிதனால் தயாரிக்கப்பட்டப் பொருள்களைப் பயன்படுத்தி, தங்களை மகிமைப்படுத்தி கடவுளை மறக்க நினைத்த மக்களைக் கடவுள் தண்டித்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பெரிய வெள்ளத்திற்குப் பிறகு, நோவாவின் மகன்களுக்கு நிறைய பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுடைய குடும்பம் பெரிதாகிக்கொண்டே போனது. அதனால், கடவுளின் வார்த்தைக்கேற்ப அவர்கள் வேறு வேறு இடங்களுக்குப் பிரிந்து போனார்கள். ஆனால், சில குடும்பங்கள் கடவுளின் பேச்சைக் கேட்கவில்லை. எனவே உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. சில மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர். அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, “வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம் உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம், நகர் ஒன்றினை உருவாக்கி, இங்கேயே தங்கலாம். வானத்தைத் தொடுகிற அளவுக்கு உயரமான ஒரு கோபுரத்தையும் கட்டலாம். அப்போது, நமக்குப் பேரும் புகழும் கிடைக்கும்’ என்று கூறிக்கொண்டு கோபுரம் கட்ட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் செய்தது கடவுளுக்குக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. அதனால், அவர்களுடைய வேலையை நிறுத்த வேண்டும் என்று முடிவு எடுத்தார். திடீரென்று, அவர்களை வேறு வேறு மொழிகளில் பேச வைத்தார். ஒருவர் பேசியது இன்னொருவருக்குப் புரியவில்லை. குழப்பத்துடன் இருந்த அவர்கள் கோபுரம் கட்டுவதையே நிறுத்தினார்கள். எனவே குழப்பம் என்னும் பொருளுடைய பாபேல் என்னும் பெயரே அவர்கள் கட்டிக்கொண்டிருந்த நகரத்துக்கு பெயரானது. கடவுள் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர். கடவுள் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கி உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார். இவ்வாறாக மனிதனால் தயாரிக்கப்பட்டப் பொருள்களைப் பயன்படுத்தி, தங்களை மகிமைப்படுத்தி கடவுளை மறக்க நினைத்த மக்களைக் கடவுள் தண்டித்தார். தன்னைத்தானே உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தப்படுவான் என்ற நற்செய்தியின் வரிகள் நமக்குணர்த்தும் பாடங்களும் இவையே.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2023, 11:13