தேடுதல்

உலகளவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு விவரங்கள் உலகளவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு விவரங்கள் 

உலகளவில் 36 கோடி கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்

உலகில் ஏழு கிறிஸ்தவர்களில் ஒருவர் தனது கிறிஸ்தவ நம்பிக்கைக்காக அதிக துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றார் : Open Doors அமைப்பின் அறிக்கை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகம் முழுவதும் 36 கோடிக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கைக்காகத் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும், பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் Open Doors அமைப்பின் World Watch List 2023 அறிக்கை தெரிவித்துள்ளது.

ஜனவரி 18, இப்புதனன்று, உரோமையிலுள்ள இத்தாலியப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு எடுத்துக்காட்டியுள்ள Open Doors அமைப்பு, கிறிஸ்தவர்கள் மிக மோசமான துன்புறுத்தலை எதிர்கொள்ளும் ஐம்பது நாடுகளையும் அதில் வரிசைப்படுத்தியுள்ளது.

உலகில் ஏழு கிறிஸ்தவர்களில் ஒருவர் தனது கிறிஸ்தவ நம்பிக்கைக்காக அதிக துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றார் என்றும், முந்தைய 2021-ஆம் ஆண்டை விட இந்த எண்ணிக்கை கணிசமாக மாறவில்லை என்றாலும், 2022-ஆம் ஆண்டு  உலகளவில் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாக இருந்துள்ளது என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 50 நாடுகளில் சிலவற்றை மட்டும் இப்போது உற்றுநோக்குவோம்.

வடகொரியாவுக்கு முதலிடம்

2021-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய “பிற்போக்கு சிந்தனைக்கு எதிரான சட்டம்” காரணமாக, கிறிஸ்தவர்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக வட கொரியா மீண்டும் தோன்றுகிறது என்றும், இதனால் கைது செய்யப்படும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், எடுத்துரைத்துள்ள இவ்வறிக்கை, கிறிஸ்தவர்களுக்கு முற்றிலும் சுதந்திரம் இல்லை, அவர்களின் மத நம்பிக்கையை கடைப்பிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டால், மரணம் இல்லாவிட்டால் தொழிலாளர் முகாம்களைச் சந்திக்க நேரிடும் என்றும், திருவிவிலியத்தை வைத்திருப்பது கூட கடுமையான குற்றம் மற்றும் அதற்குக் கடுமையான தண்டனை உண்டு என்றும் கூறுகிறது அவ்வறிக்கை.

ஆப்கானுக்கு ஒன்பதாம் இடம்

கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதில் ஆப்கான் ஒன்பதாவது இடத்தில இருப்பதால் அங்குத் துன்புறுத்தல்கள் அதிகம் இல்லை என்று பொருளல்ல, மாறாக, தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு கிறிஸ்தவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர் என்பதே அதற்குக் காரணம் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நைஜீரியா மிகவும் கவலைக்குரிய நாடு

நைஜீரியா மிகவும் கவலைக்குரிய நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது. இங்கு Boko Haram என்பதன் பெயரில் ISIS,  ADF, Muslim Fulani என்னும் கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் bandits எனப்படும் கொள்ளையர்களால் கிறிஸ்தவர்களும் அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும் தாக்கப்படுவதுடன் இவர்களில் பலர் கொடிய மரணத்தையும் சந்திக்கின்றனர் என்றும் அண்மையில் நிகழ்ந்த தாக்குதல்கள் இதற்கொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

சீனா

சீனாவில் முந்தைய ஆண்டுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சம்பவங்களை நிகழ்த்துவதில் 3000-லிலிருந்து 1000-மாக குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கின்றது.

கடத்தப்படும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2022-ஆம் ஆண்டில் கடத்தப்படும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 3,829-லிருந்து 5,259-ஆகக் கடுமையாக அதிகரித்துள்ளது என்றும், நைஜீரியா, மொசாம்பிக் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய மூன்று நாடுகளில் மட்டும் ஏறக்குறைய 5000 கிறிஸ்தவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்றும் விவரிக்கின்றது அவ்வறிக்கை.

தாக்குதல்களுக்கு உள்ளான கிறிஸ்தவ ஆலயம்
தாக்குதல்களுக்கு உள்ளான கிறிஸ்தவ ஆலயம்

இந்தியா

இந்தியாவில், நரேந்திர மோடியின் இந்து-தேசியவாத அரசு மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களின் உரிமைகளைக் குறைத்துள்ள நிலையில், இதுவரையில் மொத்தம் 1,750 கிறிஸ்தவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், எண்ணிக்கை அளவில் கிறிஸ்தவர்களின் துன்புறுத்தல்களை கணக்கிடுவது கடினம் என்றாலும், மிகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இடம்பெயர்ச் செய்யும் முயற்சியாகவே இது அமைகின்றது என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.  

மியான்மார்

மியான்மாரில், பிப்ரவரி 2021இல் நடந்த இராணுவ சதிப்புரட்சிக்குப் பிறகு, ஜுண்டா இராணுவம் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களைக் குறிவைத்து தாக்கி வருகின்றது. ஜனவரி 15, இஞ்ஞாயிறன்று, மியான்மாரின் வடமேற்கு Sagaing-இன் Ye-U நகரப் பகுதியிலுள்ள சான் தார் கிராமத்தின் 129 ஆண்டுகள் பழமையான விண்ணேற்பு அன்னை ஆலயமும், அக்கிராம மக்களின் வீடுகளும் மியான்மாரின் ஜுன்டா படைகளால் தீக்கிரையாக்கப்பட்டதாக யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இவ்விண்ணேற்பு அன்னை ஆலயம் 1894-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவப் பெண்கள்மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் 

கொடூரமான அதேவேளையில், பல மறைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் கிறிஸ்தவப் பெண்களைக் குறிவைக்கின்றன. கிறித்தவர்களின் குடும்பங்களையும் சமூகங்களையும் அவமானத்திற்கு உள்ளாக்கும்பொருட்டு அவர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகின்றனர், அல்லது கட்டாய மதமாற்றத்தை இலக்காகக் கொண்ட கட்டாயத் திருமணங்களால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவ்வறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2023, 13:44