தேடுதல்

இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை 

பொதுக் காலம் 21-ஆம் ஞாயிறு : உண்மை மெசியா வழியில் பயணிப்போம்

இயேசுவை நமது வாழ்வின் உண்மை மெசியாவாக ஏற்று அவருக்குரிய வழியில் வாழ்ந்து அவருக்குச் சான்று பகிர்வோம்.
பொதுக் காலம் 21-ஆம் ஞாயிறு : உண்மை மெசியா வழியில் பயணிப்போம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்   I.  எசா 22: 19-23   II.  உரோ  11: 33-36   III.  மத்  16: 13-20)

ஒரு நாட்டை மன்னர் ஒருவர் பல ஆண்டுகள் ஆட்சி செய்துவந்தார். மக்கள்மீது உண்மையான அன்பும் பாசமும் அக்கறையும் கொண்டிருந்தார். அவர் ஒருபோதும் தனது நலன்கள் குறித்து கவலைப்பட்டதே கிடையாது. அவருடைய மூச்சு பேச்செல்லாம் மக்கள்தான். நாட்டுமக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அயராதுப் பாடுபட்டு உழைத்து வந்தார். அவருடைய பேரன்பாலும், நீதிதவறாத ஆட்சியினாலும் அம்மக்களும் மன்னர்மீது உயிராய் இருந்தனர். அவருக்கு ஆண் வாரிசு கிடையாது. ஆனால் ஓர் அழகான மகளை மட்டுமே கொண்டிருந்தார். எனவே தன்னைப்போல தனது மக்களை நீதிநெறித் தவறாமல் ஆட்சி செய்ய ஒரு வலிமையான, துடிப்புமிக்க, இலட்சியவேட்கை கொண்ட ஒரு இளைஞனைத் தேடிக்கொண்டிருந்தார். ஒருநாள் தனது நாட்டிலுள்ள ஒரு கிராம மக்களைச் சந்தித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். நான்கு காவலர்களும் சில அமைச்சர்களும் அவரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர். அவர்கள் ஓர் அடர்ந்த காட்டின் வழியே பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென கூர்மையான ஆயுத்தங்களுடன் திருடர்கள் வந்து வழிமறித்தனர். இதனால் அமைச்சர்களும் காவலர்களும் அவர்களைப் பார்த்துத் திகைத்து விட்டனர். அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக எங்கிருந்தோ "ஆறு இளையர்கள்" வந்து அவர்களைப் காப்பாற்றினர். பின்னர் அந்த ஆறு இளையர்களும் மன்னருடன் அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டனர். மிகவும் மகிழ்ச்சியடைந்த மன்னர் அவ்விளையோரிடம் ”உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்” என்று கூறினார். முதல் இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்டான். இரண்டாவது இளைஞன் தனது குடும்பம் வாழ்வதற்கு  நல்ல வீடு வேண்டும் என்று கேட்டான். மூன்றாவது இளைஞன் தான் வாழும் கிராமத்தில் சாலைகளையும் நீர்நிலைகளையும் சீர்செய்து தரவேண்டுமென கேட்டான். நான்காவது இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளைத் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டான். ஐந்தாவது இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த மிராசுதார் பட்டத்தை மீட்டுத்தரும்படி கேட்டான். அப்போது, “நீங்கள் கேட்ட அனைத்தையும் செய்து தருகிறேன்” என்று கூறிய மன்னர், ஆறாவது இளைஞனைப் பார்த்து, “நீ ஏன் அமைதியாக இருக்கின்றாய்? உனக்கு என்ன வேண்டும் கேள்” என்றார். சற்றும் தயங்காத அவ்விளைஞன், “எனக்கு நீங்கள்தான் வேண்டும். எனக்குப் பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம். ஆண்டுக்கு ஒருமுறை நீங்கள் ஒரு ஒருமாதம் எங்கள் கிராமத்தில் வந்து தங்கவேண்டும். உங்களின் உயிருள்ள பிரசன்னம் எங்கள் ஊரில் இருந்தாலே போதும், எங்களுக்கு எல்லாமே கிடைத்துவிடும். நாங்கள் எல்லாருமே மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்” என்றான். அந்த இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த பொதுநலனை அறிந்துகொண்ட அம்மன்னர் அவனைத் தனது அடுத்த வாரிசாகத் தெரிந்துகொண்டார். தனது ஒரே மகளை அவனுக்குத் திருமண செய்துவைத்து அவனைத் தனது நாட்டின் அரசனாக்கினார்.

இன்று நாம் பொதுக் காலத்தின் இருப்பத்தோராம் ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். இன்றைய வாகசகங்கள் இயேசுவே வாழும் கடவுளின் உண்மையான மெசியா என்பதையும், இவ்வுண்மையை உரைத்த பேதுருவுக்கு இயேசு வழங்கும் தலைமைப் பொறுப்பையும் நமக்கு எடுத்தியம்புகின்றன. இப்போது நற்செய்தியை வாசித்து நமது மறையுரைச் சிந்தனைகளை விரிவுபடுத்துவோம். இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார். அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில், எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே, நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார். பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.

ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவருமே, இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கையைப் பதிவுசெய்துள்ளனர். எதற்காக இயேசு தன்னைப்பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார் என்பதைப் பற்றி சிந்திக்கும்போது அது பல உண்மைகளை நமக்குப் புலப்படுத்துகிறது. ஆண்டாண்டு காலமாக மெசியாவின் வருகை குறித்து யூத மக்களிடமும் அவர்களின் தலைவர்களிடமும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதன் பின்புலம் குறித்து சற்று அறிந்துகொண்டால் இயேசு ஏன் இந்தக் கேள்வியை எழுப்புகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். முதலாவதாக, நமது ஆதிப்பெற்றோர் பாவத்தில் வீழ்ந்தபோது அவர்களுக்கு அன்னை மரியா வழியாக மெசியா என்னும் மீட்பரின் வருகை குறித்து இறைத்தந்தையால் அறிவிக்கப்படுகிறது (காண்க தொநூ 3:14-19). இரண்டாவதாக, சாலமோன் அரசருக்குப் பிறகு இஸ்ரேல் வடக்குத் தெற்கு என இரண்டாகப் பிரிந்தது. அந்நேரத்தில் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேமுக்கு வந்து முற்றுகையிட்டு அதனைத் தீக்கிரையாக்கி அதன் மக்களைத் தன் நாட்டிற்கு அடிமைகளாகக் கொண்டு சென்றான். அப்படி கொண்டுசெல்லப்பட்ட மக்கள் துயருற்று அழுத்த வேளையில் அவர்களுக்கு மெசியாவின் வருகை அடிக்கடி அறிவிக்கப்படுகிறது. “சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்; யாக்கோபில் தீயதனின்று திரும்பியவரிடம் வருவார், என்கிறார் ஆண்டவர்” (காண்க எசா 59:20) என்று வாசிக்கின்றோம். ஆனால், அவர் எப்படிப்பட்ட மெசியாவாக இருப்பார் என்பதில்தான் வேறுபாடு இருக்கிறது.

இயேசுதான் உண்மையான மெசியாவா என்பதில் புனித திருமுழுக்கு யோவானுக்கும் கூட சந்தேகம் இருந்தது. அதற்குக் காரணம், இயேசுவின் செயல்பாடுகள்தாம். அதனால்தான் அவர் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பி அவர்கள் மூலமாக, “வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்டார். புனித திருமுழுக்கு யோவான் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார் என்பதையும் இயேசு உணர்ந்துகொள்கின்றார். அவரும் மற்ற யூதத் தலைவர்களைப்போன்றே அரசியல் மெசியாவை, அதாவது, தாவீதைப் போன்று அறியணையில் அமர்ந்து ஆட்சி செய்யப்போகின்ற ஒருவரை எதிர்பார்க்கின்றாரோ என்ற எண்ணியவராய், தன்னை வினவிய அவரின் சீடரிடம் மறுமொழியாக, “நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்” என்று கூறுகின்றார். இதன் வழியாக, தான் அரசியல் மெசியா அல்ல, மாறாக, துன்புறும் மெசியா என்பதை எடுத்துக்காட்டுகின்றார்.

பேதுருவுக்குத் தலைமைப் பொறுப்பு

“நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று பேதுரு தன்னைக் குறித்து உண்மையை உரைத்தததற்காக அவருக்குத் தலைமைப் பொறுப்பை வழங்குகின்றார் இயேசு. இதுவரை யாருமே சொல்லாத உண்மை இது. அதனால்தான் இயேசு உள்ளம் குளிர்ந்தவராய், “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில், எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக, விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்” என்று அவரைக் குறித்து புளங்காதிகம் அடைகின்றார். இதனையே "கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை!" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் பதிவு செய்கின்றார் புனித பவுலடியார். இதில் இன்னொன்றையும் நாம் உற்றுநோக்க வேண்டும். அது என்னவென்றால், யூதத் தலைவர்கள் மற்றும் திருமுழுக்கு யோவானைப் போன்றே சீமோன் பேதுருவும் இயேசுவை ஓர் அரசியல் மெசியாகவே பார்க்கின்றார் என்பதுதான். இந்நிகழ்விற்குப் பிறகு, “மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” (காண்க மத் 16:21) என்று தனது சாவை முதல்முறை அறிவிக்கின்றார் இயேசு. உடனே பேதுரு என்ன செய்கின்றார்? அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என்கின்றார் (வச 22). பேதுரு இயேசுவை அரசியல் மெசியாவாகக் கருதியக் காரணத்தினால்தான் இவ்வாறு கூறுகின்றார்.

ஆனால் அதேவேளையில், தான் துன்புறும் மெசியா என்பதை அவருக்கு உணர்த்தும் விதமாக, இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில், நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” (வச. 23) என்கின்றார். கடவுளுக்கு ஏற்றவைப் பற்றி எண்ணுவதும் அதற்கான காரியங்களை செய்துமுடிப்பதும்தான் உண்மையான சீடத்துவ வாழ்வு என்பதையும் அவர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்" (வச.24) என்கின்றார். இதன் பிறகும் கூட இயேசுவின் உயிர்ப்பு வரை இயேசுதான் உண்மையான மெசியா என்பதை பேதுருவும் சரி, ஏனைய சீடர்களும் சரி சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக, கெத்சமனித் தோட்டத்தில் இயேசு கைது செய்யப்படும் வேளை, அவரைச் சூழ்ந்து நின்ற சீடர்கள், “ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?” (காண்க லூக் 22:49) என்று கேட்கின்றனர். அப்போது சீமோன் பேதுரு தன்னிடமிருந்த வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு. இயேசு பேதுருவிடம், “வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?” (காண்க யோவா 18:10) என்றுரைக்கின்றார். மேலும் இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்பும் கூட அவரின் சீடர்கள் இயேசுவே உண்மையான மெசியா என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அவர்களின் புத்தி மழுங்கிப்போய் இருந்தது. எடுத்துக்காட்டாக எம்மாவு செல்லும் சீடர்கள் இப்படிப்பட்ட மனநிலையுடன்தான் பயணித்தனர். அதனால்தான் அவர்களின் பயணத்தில் தானும் ஒருவனாகக் கலந்துகொண்டு அவர்களின் மனநிலையை அறிந்து, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!” (காண்க லூக் 24:25-26) என்று கூறி அவர்களைக் கடிந்துகொள்கின்றார். இயேசு தனது உயிர்ப்புக்குப் பிறகு 40 நாட்கள் அவர்களைத் தொடர்ந்து சந்தித்து அவர்களின் மனங்களைப் புரிய வைக்கின்றார். உயர்ந்ததொரு இலட்சியத்திற்காக துன்புற்று இறப்பதுதான் உண்மை மெசியாவுக்குரிய வழி என்பதையும் புனித பேதுருவும் உயிர்த்த இயேசுவைப் பார்த்து அறிந்துணர்த்து கொள்கின்றார். "உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்" என்றும், நீ என்னை உண்மையிலேயே அன்பு செய்கிறாயா" என்று இயேசு மும்முறை கேட்டதும் எதற்காக என்பதை பேதுரு பிற்காலத்தில் புரிந்துகொள்கின்றார். அதன்விளைவாக இயேசுவின் வழியில் கொடிய மரணத்தை ஏற்றுக்கொள்கின்றார். ஆகவே, நான் யார்? என்னைப்பற்றி பிறர் என்ன நினைக்கின்றனர்? நான் செல்லும் பாதை உண்மை மெசியாவுக்குரியதா? நான் கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறேனா? போன்ற கேள்விகளை எழுப்பிச் சிந்திப்போம். இயேசுவை நமது வாழ்வின் உண்மை மெசியாவாக ஏற்று அவருக்குரிய வழியில் வாழ்ந்து அவருக்குச் சான்று பகிர்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

26 August 2023, 14:23