தேடுதல்

பெத்தேலில் இருந்து வந்த இறைவாக்கினர் மரத்தடியில் பெத்தேலில் இருந்து வந்த இறைவாக்கினர் மரத்தடியில் 

தடம் தந்த தகைமை - யூதாவிலிருந்து வந்த இறையடியார்

இறையடியாரைப் பின்தொடர்ந்து சென்று அவர் ஒரு கருவாலி மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு, “யூதாவிலிருந்து வந்த இறையடியார் நீர்தாமோ?” என்று அவரைக் கேட்டார். அதற்கு அவர், “நான்தான்” என்றார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

வயது முதிர்ந்த இறைவாக்கினர் ஒருவர் பெத்தேலில் வாழ்ந்து வந்தார். அவருடைய மைந்தர்கள் தங்கள் தந்தையிடம் வந்து இறையடியார் அன்று பெத்தேலில் செய்தவை அனைத்தையும், அரசனுக்குக் கூறியவற்றையும் அறிவித்தார்கள். அவர்களின் தந்தை அவர்களை நோக்கி, “அவர் எவ்வழியாகச் சென்றார்?” என்று வினவினார். அதற்கு அவர்கள் யூதாவிலிருந்து வந்த அந்த இறையடியார் சென்ற வழியைச் சுட்டிக் காட்டினார்கள். அவர் தம் மைந்தர்களிடம், “கழுதைக்குச் சேணம் பூட்டுங்கள்” என்றார். அவர்களும் கழுதைக்குச் சேணம் பூட்டிக் கொண்டுவர, அவர் அதன் மேல் ஏறிக் கொண்டார். அந்த இறையடியாரைப் பின்தொடர்ந்து சென்று அவர் ஒரு கருவாலி மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு, “யூதாவிலிருந்து வந்த இறையடியார் நீர்தாமோ?” என்று அவரைக் கேட்டார். அதற்கு அவர், “நான்தான்” என்றார். முதியவர் அவரை நோக்கி, “என்னோடு என் வீட்டிற்கு வந்து உணவருந்தும்” என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அவர், “நான் திரும்பி உம்மோடு வர இயலாது. இந்த இடத்தில் உம்மோடு உணவு அருந்த மாட்டேன். தண்ணீர் குடிக்கவும் மாட்டேன். ஏனென்றால், ‘அங்கே நீ உணவு அருந்தக் கூடாது; தண்ணீர் குடிக்கக் கூடாது; போன வழியாய்த் திரும்பி வரக்கூடாது’ என்று ஆண்டவர் எனக்குக் கூறியிருக்கிறார் என்றார். அதற்கு முதியவர், “உம்மைப் போல் நானும் இறைவாக்கினர்தான். ‘உணவருந்திக் தண்ணீர் குடிக்க நீ அவனை உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போ’ என்று ஆண்டவர் ஒரு வானதூதர் வாயிலாக எனக்குச் சொன்னார்” என்றார். ஆனால், அவர் சொன்னதோ பொய். ஆயினும் இறையடியார் அதை நம்பி அவரோடு திரும்பிச் சென்று அவரது வீட்டில் உணவருந்தித் தண்ணீர் குடித்தார்.

27 September 2023, 09:53